அரசியல் சாசனப் பிரிவு 370 இந்திய ஒற்றுமைக்கு ஆபத்தாக இருந்ததாக அமித் ஷா தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேறிய நிலையில் மக்களவையில் அதனை இன்று காலை உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதத்தில் பேசிய அமித் ஷா, “ பிரதமர் மோடியின் தீர்க்கமான முடிவை வரவேற்கிறேன். ஜம்மு காஷ்மீர் தொடர்ந்து யூனியன் பிரதேசமாகவே நீடித்திருக்காது. நிலைமை சீரடைந்த பின் காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியும் இந்தியாவுடன் சேர்ந்ததுதான். அரசியல் சாசனப் பிரிவு 370 இந்திய ஒற்றுமைக்கு ஆபத்தாக இருந்தது. அரசின் நடவடிக்கையால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளை மீட்க வழி கிடைத்துள்ளது.
அரசியல் சாசனப் பிரிவு 370 இன்றோடு முடிவுக்கு வந்து விடும். எதிர்க்கட்சியினரின் அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படும். இந்த நடவடிக்கைக்காக பிரதமர் மோடி மக்களால் என்றென்றும் நினைவு கூறப்படுவார். லடாக், ஜம்மு-காஷ்மீர் குறித்து பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. காஷ்மீரில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். காஷ்மீர் மக்களின் கருத்துகளை அறிய தயாராகவே இருக்கிறோம். அதேசமயம், பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படமாட்டாது. வெறும் அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த சட்டப்பிரிவை நாங்கள் நீக்கியுள்ளோம். அவசர நிலைப் பிரகடனம் மூலம் இந்தியாவை காங்கிரஸ் சீர்குலைத்துவிட்டது” என தெரிவித்தார். அமித் ஷா தொடர்ந்து மக்களவையில் பேசி வருகிறார்.