உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி பவானி நகரில் வசித்து வந்தவர், சுனில் குமார். பள்ளி ஆசிரியரான இவருக்கு பூனம் பார்தி என்ற மனைவியும் 1 மற்றும் 6 வயதில் இரண்டு மகள்களும் இருந்தனர். இந்த நிலையில், இவர்கள் அனைவரும், கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூர சம்பவத்தில் சந்தன் வர்மா என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர், இதில் தப்பியோட முயன்ற சந்தன் வர்மாவை காவல் துறையினர் காலில் சுட்டுப் பிடித்ததாகவும், அவர் கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், ”சந்தன் வர்மாவுக்கும் கொலை செய்யப்பட்ட பூனம் பார்திவுக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இது அவரது கணவருக்குத் தெரிந்துள்ளது. இதையடுத்து சந்தன் சர்மா மீது பூனம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால்தான் ஆத்திரத்தில் அவரது குடும்பத்தைச் சுட்டுக் கொன்றுள்ளார். அவர்களை சுட்டுக் கொன்றுவிட்டு சந்தன் சர்மாவும் சுட்டு தற்கொலை செய்துகொள்ளவே முயன்றுள்ளார். ஆனால், ஒருமுறை தன்னைத்தானே சுட்டபோது குறி தவறிவிட்டதால், மீண்டும் சுட்டுக்கொள்ள தைரியம் வரவில்லை. அதனாலேயே அங்கிருந்து தப்பியுள்ளார். அவர் இந்த கொலையை செய்வதற்கு முன்பு, தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில், ’ஐந்து பேர் சாகப் போகிறார்கள்’ எனப் பதிவிட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக பூனம் சார்தி, சந்தன் வர்மா மீது புகார் அளித்திருந்தார். அதில், தன்னைப் பாலியல் ரீதியாக சந்தன் சீண்டினார். இதைத் தட்டிக் கேட்டபோது, தானும் தன் கணவரும் சந்தன் வர்மாவால் தாக்கப்பட்டோம். தவிர, அவர் தங்கள் குடும்பத்தைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். எங்கள் குடும்பத்திற்கு ஏதாவது நடந்தால் அதற்கு அவர்தான் பொறுப்பு” என காவல் துறையிடம் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.