காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஒட்டி அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் நிலவரையில் பூஜை செய்வதற்கு எந்த தடையும் விதிக்க முடியாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் நேற்று மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மசூதியை நிர்வகித்து வரும் அஞ்சுமன் இந்தசாமியா மஸ்ஜித் குழுவின் மனுவை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. ஆகவே வியாசர் நிலவறை என அழைக்கப்படும் பகுதியில் தற்போது நடைபெற்று வரும் பூஜைகள் தொடரும் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
ஞானவாபி மசூதி முகலாயர் ஆட்சிக் காலத்தில் ஆலயத்தை இடித்து அதன் மேல் கட்டப்பட்டது என புகார்கள் தொடர்ந்து வரும் நிலையில், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்திய தொல்லியல் அமைப்பு மூலம் நீதிமன்றத்தின் உத்தரவுபடி ஞானவாபி மசூதி பகுதியில் ஆய்வுகள் நடத்தப்பட்டு அதன் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தாமரை புஷ்பம் உள்ளிட்ட பல்வேறு ஹிந்து மத சின்னங்கள் ஆய்வில் கண்டறியப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்து ஆலயத்தை இடித்து அதன் மேல் மசூதி கட்டப்பட்டுள்ளது உறுதியாகிறது என இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஞானவாபி சுவரில்கூட பல்வேறு இந்துமத அடையாளங்கள் உள்ளன எனவும் அதன் ஒரு பகுதியில் "கேதார் கௌரி" ஆலயத்தில் வழிபாடு நடைபெற்று வருகிறது எனவும் பல்வேறு விவரங்கள் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் "வியாஸ் தேகானா" என அழைக்கப்படும் வியாசர் நிலவரை பகுதியில் பூஜை நடத்த அனுமதி அளித்தது. 1993 ஆம் ஆண்டு வரை அங்கே பூஜைகள் நடைபெற்று வந்ததாகவும் அப்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆட்சியில் இருந்த முலாயம் சிங் அரசு வாய்மொழி உத்தரவு மூலமாக நிலவரையை மூடியதாகவும் மனுவை தாக்கல் செய்த சைலேந்திர பாதக் என்பவர் தெரிவித்திருந்தார்.
வியாசரின் நிலவரை 1551 ஆம் ஆண்டு முதல் தனது குடும்பத்தின் சொத்தாக இருந்து வருவதாக குறிப்பிட்ட பாதக் அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்தார். மேலும் 1936 ஆம் ஆண்டு மாநில அரசு தயாரித்த வரைபடத்தில் வியாசர் நிலவரை குறிப்பிடப்பட்டிருந்ததை பாதக் ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இதைத் தொடர்ந்து இந்த வருடம் ஜனவரி 31ஆம் தேதி வாரணாசி நீதிமன்றம் அளித்த உத்தரவில் வியாசர் நிலவரை பகுதியில் பூஜை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. சைலேந்திர பாதக் நிலவரை மூடப்படும் வரை அங்கு பூஜை செய்து கொண்டிருந்த வியாஸ் குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து வியாசர் நிலவரம் பகுதியில் தினசரி பூஜைகள் நடந்து வருகின்றன.
இதை எதிர்த்து அஞ்சுமன் இந்தசாமியா மஸ்ஜித் குழு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் மனுவை தள்ளுபடி செய்ததால் பூஜைகள் சிக்கலின்றி தொடர வழிவகுக்கப்பட்டுள்ளது. வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என அகர்வால் குறிப்பிட்டுள்ளார். முகலாயர் ஆட்சிக் காலத்தில் பல இந்து ஆலயங்கள் இடிக்கப்பட்டு அதன் மேல் மசூதிகள் கட்டப்பட்டதாக பல இந்து அமைப்புகள் புகார் தெரிவித்து வருகின்றன. அயோத்தியில் ராமர் ஆலயத்தை இடித்து அதன் மேல் மசூதி கட்டப்பட்டதாக நடைபெற்ற வழக்கு இந்த வகையில் குறிப்பிடத்தக்கது.
பாபர் மசூதி என அழைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து பல வருடங்கள் வழக்கு நடைபெற்று, இறுதியாக உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி புதிய ராமர் ஆலயம் கட்டப்பட்டு இந்த வருடம் திறப்பு விழா நடைபெற்று உள்ளது. மதுரா நகரில் உள்ள கிருஷ்ண ஜனம்பூமி ஆலயம் அருகே இதே போல ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மசூதி கட்டப்பட்டுள்ளதாக சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இத்தகைய சூழலில் காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஒட்டி அமைந்துள்ள ஞானவாபி மசூதி வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வாரணாசி பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதி என்பதும், காசி விஸ்வநாதர் ஆலயம் மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு புனரமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.