உத்திரப் பிரதேச மாநிலம் அலகாபாத் நகரைச் சேர்ந்த 9வயது சிறுவனுக்கு லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை. தன்னுடைய ஆசைப்படி அம்மாவின் லிப்ஸ்டிக்கை வாங்கி பூசிக் கொண்டுள்ளார். ஆனால், அந்தச் சிறுவனை வீட்டில் அவனது சகோதரனே கிண்டல் செய்துள்ளான். அதனால், அந்தச் சிறுவனுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுள்ளது. மிகுந்த மனவருத்தம் அடைந்துள்ளான். மனமுடைந்த அவர் தன்னுடைய வீட்டில் உள்ள கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டான். அந்த நேரத்தில் அந்தச் சிறுவனை உளவில் ரீதியாக அணுகிய அவனது சகோதரி திக்ஷா பிஜ்லானி மீட்டு சகஜ நிலைக்கு கொண்டு வந்தார். இந்தச் சிறுவனை செல்லமாக லிட்டில் கஸ் என்று வீட்டில் உள்ளவர்கள் அழைப்பார்கள்.
சகோதரி திக்ஷா பிஜ்லானி கூறுகையில், “லிட்டில் கஸின் தாயார் சிறிய லிப்ஸ்டிக் ஒன்றினை வைத்திருந்தார். கொஞ்ச நாட்கள் பயன்படுத்திய பிறகு அந்த லிப்ஸ்டிக்கை தூக்கிய எறிய முயன்ற போது, சிறுவன் லிட்டில் கஸ் அதனை கேட்டு வாங்கியுள்ளான். அதனை வாங்கிய உடன் தன்னுடைய உதட்டில் அதனை பூசியுள்ளான். ஆனால், அவனுடன் இருந்த ஒருவன் கிண்டல் செய்துள்ளான். நீ என்ன மாற்று பாலினத்தவராக மாறப் போகிறாயா? என்று கேட்டுள்ளான். அப்படி கேட்டதற்கு என்ன அர்த்தம் என்று கூட அவனுக்கு தெரியவில்லை. தொடர்ந்து லிட்டில் கஸை அவனுடன் இருந்தவன் டீஸ் செய்துள்ளான். இதனால், அவன் கூச்சப்பட்டுக் கொண்டு கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டான். லிப்ஸ்டிக் போட்ட தன்னுடைய முகத்தை மூடிக் கொண்டார். சிறிது நேரம் நாங்கள் எங்கு தேடியும் அவனை காணவில்லை. நாங்கள் பயந்துவிட்டோம். பைத்தியமே பிடித்துவிட்டது போல் இருந்தது. பின்னர் ஒருவழியாக கண்டுபிடித்துவிட்டோம்” என்றார்.
இதனையடுத்து, மனமுடைந்த சிறுவனுக்கு தங்களது ஆறுதலையும், ஆதரவையும் தெரிவிக்க சகோதரி திக்ஷா விரும்பியுள்ளார். எல்லோருடன் சேர்ந்து ஒரு யோசனை செய்துள்ளார். திக்ஷா தன்னுடைய சகோதரர் கீட், மற்றொரு உறவினருடன் சேர்ந்து எல்லோரும் லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டனர். பின்னர் கட்டிலுக்கு அடியில் உள்ள சிறுவனுக்கு எல்லோரும் லிப்ஸ்டிக் அணிந்திருப்பதை காட்டியுள்ளனர்.
“என்னுடைய சகோதரர் லிப்ஸ்டிக் பூசியிருப்பதை கண்டு அவன் புன்னகையித்தான். எல்லோரும் சேர்ந்து கைதட்டி அவனை உற்சாகப்படுத்தினோம். பின்னர் மெல்ல மெல்ல கட்டிலுக்கு அடியில் இருந்து அவன் வெளியே வந்தான். அவனுடன் ஒட்டி இருந்த கூச்சமும், இருக்கமும் மெல்ல அவனை விட்டுச் சென்றது.” என்றார்.
திக்ஷா பிலானி டெல்லி பல்கலைக் கழகத்தில் உளவியல் படிக்கிறார். மேற்கொண்டு திக்ஷா கூறுகையில், “லிட்டில் கஸ் லிப்ஸ்டிக் பூசிக் கொள்வதில் என்னுடைய தாய்க்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், மற்றொரு சகோதரன் தான் தடுத்துள்ளான். அவன் தான் லிட்டிலை கிண்டல் செய்துள்ளான். நாங்கள் லிப்ஸ்டிக் அணிந்திருப்பதை கண்டு அவன் பயந்துவிட்டான். அவனை கிண்டல் செய்வதை நிறுத்திவிட்டான்” என்றார்.
இந்த விஷயங்களை எல்லாவற்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். திக்ஷாவின் ட்விட்டர் பக்கத்தில் பலரும் அவரது உற்சாகமூட்டும் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். ‘இந்த விஷயம் எங்கள் மனதை உருக்கிவிட்டது. திக்ஷா போன்றவர்கள் நமக்கு தேவை.’என ஒருவர் பதிவிட்டிருந்தார். அதேபோல், ‘இந்த உலகத்திற்கு இதுபோன்ற நிறைய அக்காக்கள் தேவை’ என்று ஒருவர் புகழ்ந்துள்ளார்.