விஸ்தாரா விமானத்தில் பயணிகள் இருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஜூன் 25 ஆம் தேதி மும்பையில் இருந்து டேராடூன் சென்ற விமானத்தில் இந்நிகழ்வு நடந்ததாக கூறி, இது குறித்த விளக்கம் ஒன்றையும் விஸ்தாரா நிறுவனம் அளித்துள்ளது.
வைரலான அந்த வீடியோ 27 வினாடிகளைக் கொண்டது. அதில் ஒருவர் தனது சக பயணி ஒருவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். “எவ்வளவு தைரியம் இருந்தால் எனது மகளை மிரட்டுவாய்?” என வேகமாக இருக்கையில் இருந்து எழும் அந்த பயணியை, உடன் சென்ற மற்றொரு பயணி சமாதானப்படுத்துகிறார். விமானப் பணிப்பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். தொடர்ந்து இது குறித்து தலைமை விமானியிடம் தெரிவிக்குமாறும் கூறியபடி இருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக விஸ்தாராவின் செய்தித் தொடர்பாளர் கூறும்பொழுது, “ஜூன் 25, 2023 அன்று மும்பையில் இருந்து டேராடூனுக்குச் செல்லும் யுகே 852 என்ற விஸ்தாரா விமானத்தில் இரு பயணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பயணி ஒருவர் தனக்குப் பின்னால் அமர்ந்திருந்த இளம் பயணியால் தொந்தரவுக்கு ஆளானார். தொந்தரவுக்கு உள்ளானவர், அந்த இளம்பயணியை நோக்கி கேள்விகளை எழுப்பியுள்ளார். அப்போது அந்த இளம் பயணியின் பெற்றோர் இவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது வாக்குவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. தொடர்ந்து விஸ்தாரவின் விமான பணிப் பெண்கள் தலையீட்டின் பேரில் பிரச்சனை தீர்க்கப்பட்டது. எஞ்சிய பயணம் அவர்களுக்கு சுமூகமாக அமைந்தது” என தெரிவித்துள்ளார்.