பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ் குமாரால் இன்று திறக்கப்படவிருந்த அணையின் ஒரு பகுதி, நேற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட அவலம் நடைபெற்றுள்ளது.
பீகார் மாநிலம் பகல்பூர் என்ற இடத்தில் ரூ.389 கோடி மதிப்பீட்டில் அணை ஒன்று கட்டப்பட்டது. இதனை அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று திறந்து வைக்க இருந்தார். இதனிடையே, அணை திறக்கப்படும் முன்னரே நேற்று ஏற்பட்ட வெள்ளத்தில், அணை அடித்துச் செல்லப்பட்டது.
இந்நிலையில் அணை உடைந்ததற்கு வெள்ளம் முழு வேகத்தில் வந்ததே காரணம் என அம்மாநில நீர் வளத்துறை அமைச்சர் லல்லன் சிங் தெரிவித்துள்ளார். அணையில் புதிதாக கட்டப்பட்ட பகுதிக்கு எதுவும் நேரவில்லை என்றும் பழைய பகுதியில்தான் உடைப்பு ஏற்பட்டதாகவும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால், இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் நிதிஷ்குமாரின் மோசமான ஊழல் ஆட்சி நிர்வாகமே காரணம் என பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். அணை அடித்துச் செல்லப்பட்டதையடுத்து, பகல்பூர் செல்லவிருந்த முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பயணம் ரத்து செய்யப்பட்டது.