இந்தியா

கடவுளின் தேசத்தில் காட்டுமிராண்டித்தனம்: ஆதிவாசி இளைஞர் அடித்துக் கொலை

கடவுளின் தேசத்தில் காட்டுமிராண்டித்தனம்: ஆதிவாசி இளைஞர் அடித்துக் கொலை

webteam

கேரளாவில் 15 பேர் கொண்ட கும்பலால் ஆதிவாசி இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி 15 பேர் கொண்ட கும்பல் ஆதிவாசி இளைஞர் ஒருவரை அடித்துள்ளனர். இதுகுறித்த வீடியோ மற்றும் போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்தப் போட்டோவில் ஆதிவாசி இளைஞரின் கைகள் கட்டப்பட்டிருக்கிறது. ஒரு இளைஞர் அந்த நபரிடம் பேசிக்கொண்டிருக்கிறார். மற்றொருவர் இந்தக் காட்சியை செல்ஃபி  எடுக்கிறார். இந்த கும்பலின் தாக்குதலுக்கு பிறகு அந்த ஆதிவாசி இளைஞர் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லும் வழியில் அந்த இளைஞருக்கு உடல் நலக் குறைவு ஏற்படவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலே அந்த நபர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து அகாலி காவல்துறையினர் கூறுகையில், அதிவாசி இளைஞரின் பேர் மது. அப்பகுதியில் உள்ள கடைகளில் இரவு நேரங்களில் புகுந்து அரிசி திருடியதாக அவர் மீது 3 வழக்குகள் ஏற்கெனவே உள்ளது. இரவு நேரங்களில் நகர் பகுதிக்கு வந்து அரிசிகளை திருடிவிட்டும் மீண்டும் காட்டுக்கு சென்று விடுவான். இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை கல்கண்டா பகுதியில் உள்ள கடையில் இருந்து அரிசி திருடியுள்ளான். இதனையடுத்து ஒரு கும்பல் காட்டுப் பகுதிக்கு சென்று அவனை பிடித்துவந்துள்ளனர். இதுதொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்று ஆதிவாசி இளைஞரை கைது செய்து ஜீப்பில் ஏற்றிக்கொண்டு காவல்நிலையம் செல்லும் வழியில் தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளான். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால் செல்லும் வழியிலேயே அவன் சுயநினைவிழந்து காணப்பட்டான். அவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே மேற்கொண்டு இச்சம்பவம் குறித்து கூறமுடியும் என தெரிவித்துள்ளனர்.