நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் திலீப்பின் நீதிமன்ற காவல் வரும் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகர் தீலிப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திலீப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக மட்டும் 2 மணி நேர பரோலில் திலீப் விடுவிக்கப்பட்டார்.
இந்த சூழலில் கொச்சி அங்கமாலி நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக நடிகர் திலீப் தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்துள்ளது. நடிகர் திலீப்பின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து, கொச்சி ஆலுவா கிளைச்சிறையில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நடிகர் திலீப்பிடம் வழக்கு தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டி இருப்பதால், அவரது காவலை நீடிக்க வேண்டும் என வாதாடினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ரீமா ரியாஸ், திலீப்பின் காவலை 28ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.