நாட்டையே உலுக்கிய ஆருஷி தல்வார் கொலை வழக்கில், பெற்றோரை அலகாபாத் உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
டெல்லி அருகே நொய்டாவைச் சேர்ந்தவர் ராஜேஷ் தல்வார். இவரது மனைவி நூபுர் தல்வார். பல் மருத்துவர்களான இவர்களின் மகள் ஆருஷி தல்வார் கடந்த 2008-ம் ஆண்டு வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்துகிடந்தார். இந்த கொலையில் முதலில் வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் மீது போலீசார் சந்தேகம் அடைந்தனர். ஆனால் இரண்டு தினங்களில் ஹேம்ராஜூம் அதே வீட்டில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தார். இந்த இரட்டை கொலை சம்பவம் நாட்டையே உலுக்கியது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டைக் கொலை வழக்கில், மாநில போலீசாரால் துப்பு துலக்க முடியாததால் வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. விசாரணையின் முடிவில் ஆருஷியின் பெற்றோரான ராஜேஷ் தல்வார், நூபுல் தல்வார் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த காசியாபாத் சிபிஐ நீதிமன்றம், அவர்கள் இருவருக்கும் கடந்த 2013ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது.
தண்டனையை எதிர்த்து இருவரும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கின் அனைத்து தரப்பு சாட்சியங்களிடமும் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது பெற்றோர்தான் குற்றவாளி என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் கூறியது. சந்தேகத்தின் பலனை பெற்றோருக்கு சாதமாக அளித்து அவர்களை அலகாபாத் உயர்நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.