இந்தியா

ஆரூஷியின் பெற்றோர் சிறையில் இருந்து வெளியே வந்தனர்

ஆரூஷியின் பெற்றோர் சிறையில் இருந்து வெளியே வந்தனர்

webteam

நாட்டையே உலுக்கிய ஆருஷி தல்வார் கொலை வழக்கில், பெற்றோரை அலகாபாத் உயர்நீதிமன்றம் விடுதலை செய்ததை அடுத்து, அவர்கள் சிறையில் இருந்து வெளியே வந்தனர்.

டெல்லி அருகே நொய்டாவைச் சேர்ந்தவர் ராஜேஷ் தல்வார். இவரது மனைவி நூபுர் தல்வார். பல் மருத்துவர்களான இவர்களின் மகள் ஆருஷி தல்வார் கடந்த 2008 ஆம் ஆண்டு வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இந்த கொலையில் முதலில் வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் மீது போலீசார் சந்தேகம் அடைந்தனர். ஆனால் இரண்டு தினங்களில் ஹேம்ராஜூம் அதே வீட்டில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தார். இந்த இரட்டை கொலை சம்பவம் நாட்டையே உலுக்கியது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டைக் கொலை வழக்கில், மாநில போலீசாரால் துப்பு துலக்க முடியாததால் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. விசாரணையின் முடிவில் ஆருஷியின் பெற்றோரான ராஜேஷ் தல்வார், நூபுல் தல்வார் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த காசியாபாத் சிபிஐ நீதிமன்றம், அவர்கள் இருவருக்கும் கடந்த 2013ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது.

தண்டனையை எதிர்த்து இருவரும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கின் அனைத்து தரப்பு சாட்சியங்களிடமும் விசாரணை முடிவடைந்த நிலையில் அக்டோபர் 12ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது பெற்றோர்தான் குற்றவாளி என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் கூறியது. சந்தேகத்தின் பலனை பெற்றோருக்கு சாதமாக அளித்து அவர்களை அலகாபாத் உயர்நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து, இரட்டைக் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆரூஷியின் பெற்றோர், இன்று மாலை சிறையிலிருந்து வெளியேறினர். அவர்களை ஆரூஷியின் சகோதரர் தினேஷ் தல்வார், அவர்களின் வழக்கறிஞர் மனோஜ் சிசோடியா மற்றும் தன்வீர் அகமது மிர் ஆகியோர் தஸ்னா சிறை வாசலுக்கு சென்று வரவேற்றனர். இந்த தம்பதி சிறையிலிருந்து வெளியே சென்றாலும், குற்றவியல் நடைமுறை சட்டம் 437 (ஏ) பிரிவின் படி, எப்போதும் நீதிமன்றத்தில் ஆஜராக தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால், இந்த வழக்கில் சிபிஐ மேல் முறையீடுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.