‘தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்’ என்றார் பாரதி. அவர் சொன்ன வரிகளின் படி இல்லை என்றாலும் வறியவர்கள் பசிப்பிணியை போக்க ஓடிக் கொண்டிருக்கிறார் ஹைதராபாத்தை சேர்ந்த 29 வயது இளைஞர் மல்லேஸ்வர் ராவ். உணவகங்கள் மற்றும் சுப நிகழ்வுகளில் வீணாக குப்பையில் வீசி எறியப்படும் உணவை DON’T WASTE FOOD என்ற முயற்சியினால் உணவு கிடைக்காதவர்களுக்கு உணவளித்து வருகிறார் அவர்.
“நான் ஹைதரபாத்திற்கு பி.டெக் படிப்பதற்காக வந்தேன். அப்போது பகுதி நேரமாக கேட்டரிங் நிறுவனத்தில் உணவு பரிமாறும் பணியை கவனித்தேன். அதன் மூலம் நிறைய உணவு வீணாவதை எனது கண் முன்னே பார்த்தேன். மறுபக்கம் அதே பகுதியில் பலர் உணவுக்காக அல்லாடுவதை பார்த்தேன். அதனால் வீணாகும் உணவு குப்பையில் சேர்க்காமல் பசியோடு இருப்பவர்களிடம் சேர்க்க ஆரம்பித்தேன். அதன் பலனாக உருவானது தான் DON’T WASTE FOOD.
தொடக்கத்தில் பல விதமான விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் சில நண்பர்களின் உதவியோடு வீணாகும் உணவை பொட்டலம் கட்டி பசித்தவர்களிடம் கொடுக்க ஆரம்பித்தேன். இந்த முயற்சி கடந்த 2011இல் ஆரம்பமானது. இப்போது நாள் ஒன்றுக்கு 2000 பேர் வரை உணவு கொடுத்து வருகிறோம். விசேஷங்கள் இல்லாத நாட்களில் உணவகங்களை நாடுவோம். ஆரம்பத்தில் உணவை தேடி நாங்கள் சென்று கொண்டிருந்தோம். இப்போது உணவு வீணானால் எங்களுக்கு உடனடியாக போன் வருகிறது. அதை நாங்கள் நேரடியாக சென்று பெற்றுக் கொள்கிறோம்” என்கிறார் அவர்.
மேலும் குழந்தைகள் பள்ளி செல்வதன் அவசியத்தை குடிசை வாழ் பகுதிகளில் உள்ளோருக்கு விழிப்புணர்வு கொடுக்கும் வகையில் கனெக்ட் ஹாப் என்ற தன்னார்வ அமைப்பிலும் ராவ் இயங்கி வருகிறார். ராவ் சிறு குழந்தையாக இருந்த போது குடும்ப சூழலினால் பட்டினி வேதனையை அனுபவித்து உள்ளதாகவும் சொல்கிறார்.