இந்தியா

ரத்த வாந்தி என வந்த இளைஞரின் வயிற்றில் இருந்த பிளேடுகள்.. அதிர்ந்துப்போன மருத்துவர்கள்!

ரத்த வாந்தி என வந்த இளைஞரின் வயிற்றில் இருந்த பிளேடுகள்.. அதிர்ந்துப்போன மருத்துவர்கள்!

JananiGovindhan

குழந்தைகள் அல்லது மன ரீதியாக பாதிக்கப்பட்ட பெரியவர்கள் சிலர் சில்லரை நாணயங்களை விழுங்குவது போன்ற பல விசித்திரமான நிகழ்வுகள் அவ்வப்போது வெளியே தெரிவதுண்டு. அந்த வகையில் ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர் ஒருவரது வயிற்றில் கிட்டத்தட்ட 56 பிளேடுகள் இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

ராஜஸ்தானின் சன்சோர் மாவட்டத்தொல் உள்ள டட்டா கிராமத்தில் வசித்து வருபவர் 25 வயதான யாஷ்பல் சிங். கணக்காளராக இருக்கக் கூடிய யாஷ்பல், தன்னுடைய மற்ற நான்கு நண்பர்களுடன் சேர்ந்து ஒரே வீட்டில் வசித்து வருகிறார். வீட்டில் இருந்த போது திடீரென ரத்த வாந்தி எடுத்ததை அடுத்து சக நண்பரிடம் தெரிவிக்கவே உடனடியாக யாஷ்பல் அருகே இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

முதலில் எக்ஸ்ரே எடுத்து பார்த்த மருத்துவருக்கு, யாஷ்பலின் வயிற்றில் ஏதோ உலோகம் இருப்பது தெரிய வந்ததால் சோனோகிராஃபி மற்றும் எண்டோஸ்கோபி சோதனை மேற்கொண்டதன் மூலம் யாஷ்பலின் வயிற்றில் எண்ணற்ற பிளேடுகள் இருந்ததை கண்டறிந்திருக்கிறார்கள்.

இதனையடுத்து எந்த தாமதமின்றி உடனே அறுவை சிகிச்சை மேற்கொண்டு யாஷ்பலின் வயிற்றில் இருந்த பிளேடுகள் அனைத்தையும் வெளியேற்றி இருக்கிறார்கள். இது குறித்து பேசியிருக்கும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் நார்சி ராம், “யாஷ்பல் தற்போது நலமாக இருக்கிறார். பிளேடுகளை அதன் பேப்பர் கவரோடு சாப்பிட்டிருக்கிறார். முதலில் சாப்பிடும் போது பேப்பரோடு பிளேடு இருந்ததால் வலி தெரியாமல் இருந்திருக்கிறது.

ஆனால் உட்கொண்ட பிறகு அந்த பேப்பர் கரைந்ததால் வயிற்றில் அசவுகரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் வாயு உண்டானதால் குமட்டலாக வெளிப்பட்டு ரத்த வாந்தி எடுத்திருக்கிறார். அத்தனை பிளேடுகளையும் இரண்டாக உடைத்தே பேப்பரோடு யாஷ்பல் சாப்பிட்டிருக்கிறார்.” என கூறியிருக்கிறார்.

இது குறித்து யாஷ்பலின் உறவினரிடம் விசாரித்த போது, “வழக்கம் போல யாஷ்பலின் செயலில் எந்த மாற்றத்தையும் உணரவில்லை. ஆனால் பிளேடுகளை ஏன் உட்கொண்டார் என தெரியவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்கள்.