மகாராஷ்டிராவின் கடலோரப் பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 73 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 47 பேர் காணாமல் போயுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்தது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் ராய்காட், ரத்னகிரி மற்றும் சதாரா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய படையின் இயக்குநர் ஜெனரல் (டி.ஜி) எஸ்.என் பிரதான் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ரெய்காட் மாவட்டத்தில் மிக மோசமான பாதிப்புக்குள்ளான தாலியே கிராமத்தில் அதிக எண்ணிக்கையில் 44 பேர் உயிரிழந்தனர் என்றும், இதுவரை மொத்தம் 73 சடலங்களை என்டிஆர்எஃப் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். மேலும், இந்த மூன்று மாவட்டங்களிலும் 47 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக 34 குழுக்களை தேசிய பேரிடர் மீட்புப்படை அனுப்பியுள்ளது.
சனிக்கிழமை வரை உள்ள புள்ளிவிவரங்களின்படி, மகாராஷ்டிராவின் புனே மற்றும் கொங்கன் பகுதிகளைத் தாக்கிய கனமழையால் இறந்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக உள்ளது. இதில் கடலோர ராய்காட் மாவட்டத்தில் மட்டும் 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் 78,111 பேர் உட்பட மொத்தம் 1,35,313 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.