இந்தியாவில் தற்கொலை செய்து கொண்ட பெண்களில் 50 விழுக்காட்டினர் வீட்டை கவனிக்கும் குடும்பத் தலைவிகள் என தேசிய குடும்ப சுகாதார கருத்துக்கணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டில் தற்கொலை செய்த இந்தியப் பெண்களின் எண்ணிக்கை 45,026 ஆக உள்ளது. இதில் சரிபாதி சதவிகிதத்தினர், வீட்டை பராமரிக்கும் குடும்பத் தலைவிகள் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மட்டுமன்றி இந்தியாவின் ஒட்டுமொத்த தற்கொலைகளில் 15 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் குடும்பத்தலைவிகள்.
கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில்தான் தற்கொலைகள் அதிகளவில் நிகழ்ந்துள்ளன. தென்னிந்தியாவில் படித்த பெண்கள் அதிகம் இருக்கும் சூழலில், அவர்கள் தங்களின் கணவர் வீட்டில் சரியாக நடத்தப்படாதபோது முரண்பாடுகள் அதிகம் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக மாமியார், நாத்தனார் உள்ளிட்ட இரு தலைமுறை பெண்கள் இடையே மோதல் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். வெளியே போவதற்கு கட்டுப்பாடு, பொருளாதார கட்டுப்பாடு, உடல்ரீதியான, பாலியல் ரீதியான, உணர்வுரீதியான வன்முறையும் தற்கொலைக்கு காரணம் என இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.