பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தசரா கொண்டாட்டத்தின் போது ஜோடா பதக் என்ற பகுதியில் மக்கள் மீது ரயில் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தசரா விழா கொண்டாட்டத்தின்போது நேரிட்ட ரயில் விபத்தில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜோடா பதக் பகுதியில் தசரா கொண்டாட்டத்தின் போது ராவணன் உருவ பொம்மையை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. உருவபொம்மை எரிக்கப்பட்டப் போது பட்டாசுகள் வெடித்து மக்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர்.
அப்போது பலர் ரயில் தண்டவாளத்தில் நின்றிருந்ததாகத் தெரிகிறது. பட்டாசுகள் வெடித்த போது சிலர் சிதறி ஓடியதாகவும் கூறப்படுகிறது. அப்போது ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி சென்ற ரயில் அவர்கள் மீது மோதி நிகழ்ந்த விபத்தில் அப்பகுதியே ரத்தக்களரியாக மாறியது. இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொண்டாட்டத்தின் போது 700க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் கூடியிருந்ததாகவும், பட்டாசு வெடிக்கும் ஒலியில் ரயில் வந்ததை மக்கள் கவனிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
விபத்து நிகழ்ந்த இடத்திற்கு உடனடியாக செல்வதாகவும், மீட்புப் பணிகளை நேரில் கண்காணிக்க உள்ளதாகவும் முதலமைச்சர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத்சிங் சித்துவின் மனைவி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தசரா விழாவில் இந்த சோகச்சம்பவம் நடந்துள்ளது. அவர் கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.