assembly election pt desk
இந்தியா

5 மாநில சட்டமன்ற தேர்தல் - கட்சிகளின் சாதக, பாதகம் என்ன? - இது நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமா?

மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல்களில் காங்கிரஸ் பாஜக இடையே கடும் போட்டி நிழவும் நிலையில், ஆட்சியமைக்க எந்த மாநிலத்தில் யாருக்கு வாய்ப்பு அதிகம் விரிவாக பார்க்கலாம்.

webteam

5 மாநில சட்டமன்ற தேர்தல், 2024 பாராளுமன்ற தேர்தலின் முன்னோட்டமா?

மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் பாரதிய ஜனதாவுக்கும் காங்கிரசுக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ர சமிதி 3 ஆம் முறையாக ஆட்சி அமைக்க முனையும் நிலையில், அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. மிசோரத்தை பொறுத்தவரை ஆளும் மிசோ தேசிய முன்னணிக்கு, மாநில கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி கடும் போட்டியாக உருவெடுத்துள்ளன. இந்த 5 மாநில தேர்தல் வரும் நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இனி 5 மாநிலங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தான்:

ராஜஸ்தானில் மொத்தம் 200 தொகுதிகள் இருக்கின்றன. காங்கிரஸ் ஆளும் அங்கு முதலமைச்சராக அசோக் கெலாட் இருக்கிறார். 1993ல் குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப்பின் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு பாரதிய ஜனதாவும், காங்கிரசும் மாறி மாறி ராஜஸ்தானை ஆட்சி செய்து வருகின்றன. இந்த முறை காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதால், ஆட்சிக்கு எதிர் மனநிலை எழுந்தால் பாஜக வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Ashok Gehlot

பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் பலமும் பலவீனமும்?

ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்தது, புதிய மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவை கெலாட்டுக்கு ஆதரவாக பார்க்கப்படுகிறது. பாஜகவை பொறுத்தவரை பூத் அளவில் நல்ல கட்டமைப்பு இருக்கிறது. இதனாலமுன்னதாகவே தேர்தல் பணிகளை அக்கட்சி தொடங்கிவிட்டது. இங்கு அதிக அளவிலான பொதுக்கூட்டங்களை பிரதமர் மோடி நடத்தி வருவதால் வாக்கு அதிகரிக்கக்கூடும் என்று அக்கட்சி நினைக்கிறது. அதேநேரம், கட்சிக்குள் இருக்கும் வேறுபாடுகள், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாதது போன்ற காரணங்கள் பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகின்றன.

BRS கட்சி ஆட்சி செய்யும் தெலங்கானா

நவம்பர் 30ஆம் தேதி தேர்தலை எதிர் கொண்டுள்ள தெலங்கானாவை பொறுத்தவரை, BRS கட்சி ஆட்சியில் இருக்கிறது. 2014, 2018 ஆம் ஆண்டு என இரண்டு முறையும் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சியை பிடித்தது. தெலங்கானா தனி மாநிலமாக உருவானதற்கு சந்திரசேகர ராவே காரணம் என்பது அவருக்கு சாதகமானதாக பார்க்கப்படுகிறது. 9ஆண்டுகளில் பெரிய அளவிலான முதலீடுகளை BRS கட்சி ஈர்த்துள்ளது.

CM Chandrashekar Rao

BRS கட்சியின் சாதக பாதகம்

கிராம மற்றும் நகர்ப்புற உட்கட்டமைப்பு, சுகாதாரத் துறைகளில் குறிப்பிட்டத்தக்க அளவுக்கு பிஆர்எஸ் கட்சி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஆனால், பல எம்எல்ஏக்கள் மீது அதிருப்தி இருக்கிறது. சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கான முக்கியத்துவத்தால் வாரிசு அரசியல் என்ற விமர்சனமும் இருக்கிறது. பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக என மும்முனைப் போட்டி அங்கு நிலவுகிறது.

பாஜக ஆட்சி செய்யும் மத்தியப்பிரதேசம்

மத்தியப்பிரதேசத்தை பொறுத்தவரை2 30 தொகுதிகள் இருக்கின்றன. இங்கு4 ஆவது முறை முதலமைச்சராக உள்ள சிவராஜ் சிங் சௌகான் மற்றும் காங்கிரஸ் மாநிலத்தலைவர் கமல்நாத் இடையே போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சிக்கு எதிர் மனநிலை என்பது பாரதிய ஜனதாவுக்கான சவாலாக இருக்கும். மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

cm Shivraj singh

காங்கிரஸா, பாஜகவா யாருக்கு வாய்ப்பு?

கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 114 இடங்களை வென்றது. பாஜக 109 இடங்களை வென்றது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சைகளுடன் இணைந்து கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஆனால், காங்கிரசில் இருந்து சிந்தியா ஆதரவாளர்கள் பாஜகவுக்கு தாவியதையடுத்து 2020-ல் ஆட்சி கவிழ்ந்து சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் ஆட்சியை பிடித்தார். இத்தேர்தல் கருத்தியல்களுக்கு எதிராக நடக்கும் போர் என்று சிவராஜ் சிங்சவுகான் கூறியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு, மக்களுக்கான வாக்குறுதிகள் என காங்கிரஸ் கட்சி தேர்தலை எதிர் கொள்கிறது.

காங்கிரஸ் ஆட்சி செய்யும் சத்தீஸ்கர்

சத்தீஸ்கரில் 15 ஆண்டுகளாக பாரதிய ஜனதா ஆட்சி நீடித்த நிலையில், 2018 தேர்தலில் காங்கிரசிடம் ஆட்சி சென்றது. மொத்தமுள்ள 90 இடங்களில் காங்கிரஸ் 71 இடங்களை வென்றது. பிரதான எதிர்க் கட்சியாக பாஜக 15 இடங்களை பிடித்தது. இங்கு காங்கிரஸ், பாரதிய ஜனதா இடையேதான் பிரதான போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் முதலமைச்சர் புபேஷ் பாகல் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நம்பிக்கையுடன் இருக்கிறார்.

cm Bhupesh Baghel

மோடியை செல்வாக்கை நம்பியுள்ள பாஜக

அங்கு பல்வேறு பிராந்திய கட்சிகள் ஆங்காங்கே பலத்துடன் உள்ள நிலையில், ஆம் ஆத்மியும் களத்தில் இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கை பாஜக நம்பியிருக்கிறது. கடந்த 3 மாதங்களில் 4 பொதுக் கூட்டங்களில் பிரதமர் பங்கேற்றுள்ளார், விவசாயிகள், நிலமற்ற தொழிலாளர்கள், வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள், உள்ளிட்டோருக்கு நிதி உதவி திட்டங்களை சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

மிசோரம் மாநில சட்டமன்ற தேர்தல்

1987ல் தனி மாநிலமாக உருவாகிய மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி அல்லது காங்கிரஸ் கட்சி மாறி மாறி ஆட்சியை பிடித்து வருகின்றன. 40 தொகுதிகளை கொண்ட மிசோரத்தில், ஸோரம் மக்கள் அமைப்பு (Zoram People's
Movement), இந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் எழுச்சி பெற்றிருப்பது மற்ற கட்சிகளுக்கு சவாலாக பார்க்கப்படுகிறது.

CM Zoramthanga

தேர்தல் களத்தில் முந்துவது யார்?

மிசோரத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 7 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. Zoramthanga தலைமையிலான மிசோ தேசிய முன்னணி மீண்டும் ஆட்சி அமைக்கும் முனைப்பில் உள்ளது. மிசோரம் தனி மாநிலமாக உருவானத்தில் இருந்து மிசோ தேசிய முன்னணி 3 முறை ஆட்சி செய்துள்ளது. காங்கிரஸ் 4 முறை ஆட்சியில் இருந்துள்ளது. மணிப்பூர் அகதிகளுக்கு ஆதரவளித்ததன் மூலம் Zoramthanga-க்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

Lalsawta தலைமையிலான காங்கிரஸ்கட்சி, புதிய முகங்களை கொண்டுவந்து கட்சிக்குள் சீர்த்திருத்தம் செய்து தேர்தலை எதிர் கொள்கிறது.