புதுச்சேரியில் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும் என கூறி அதிகாரிகள் கவனத்தை திசைதிருப்பி தபால் நிலையத்தில் 48 ஆயிரம் ரூபாய் திருடிய டிப் டாப் பெண் உட்பட மூன்று பேரை போலீசார் சிசிடிவி காட்சி மூலம் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, முதலியார்பேட்டையில் காவல் நிலையத்திற்கு எதிரில் உள்ள துணை தபால் நிலையத்திற்கு இன்று காலை வந்த டிப் டாப் பெண் உட்பட மூன்று பேர் தங்களுக்கு சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும் என துணை தபால் நிலைய அதிகாரி லட்சுமி நரசிம்மனிடம் பேசி வந்துள்ளனர்.
அப்போது அவர் கணக்கு தொடங்குவதற்கான படிவங்களை எடுத்து கொண்டிருந்த போது அவரது கவனத்தை திசைதிருப்பி அங்கே வைக்கப்பட்டிருந்த 2000 ரூபாய் கட்டிலிருந்து 48 ஆயிரத்தை மூன்று நபர்களும் திருடிய பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த திருட்டு சம்பவம் குறித்து லட்சுமி நரசிம்மன் அளித்த புகாரை அடுத்து முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவியில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தேடி வருகின்றனர்.
இந்த திருட்டு சம்பவம் முதலியார் பேட்டை காவல் நிலையத்தின் அருகே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தபால் நிலையத்தில் இருந்து பணத்தை திருடிக்கொண்டு மூவரும் வெளியே ஓடிவரும் காட்சி அங்கே உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.