ஊரடங்கு உத்தரவு மற்றும் கொரோனா பாதிப்பால் இந்தியாவில் 40 கோடி பேர் வறுமையின் பிடியில் சிக்க வாய்ப்புள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கால் முடங்கியுள்ளன. இந்தியாவில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு தொடரும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் இந்தியாவில் சுமார் 40 கோடி பேர் வறுமையில் மூழ்க வாய்ப்புள்ளதாக ஐ.நா தொழிலாளர்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவால் உலகம் முழுவதும் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஐ.நா ஆய்வு செய்து தகவல் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, உலகில் 195 மில்லியன் முழுநேரப் பணியாளர்கள் அல்லது 6.7% பேரு வேலை நேரத்தை இழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகிற்கு ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடியாக இது கருதப்படுகிறது.
உலக அளவில் மொத்தம் கொரோனா எதிரொலியால் சுமார் 200 கோடி பேர் வருமானத்தை இழக்கும் ஆபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வளரும் நாடுகளிலேயே இது அதிகமாக காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் 90 சதவிதிதம் பேர் நடுத்தர பொருளாதாரத்தை கொண்டவர்கள் என்றும், அவர்கள் இந்த ஊரடங்கால் பெரும் பாதிப்பை சந்திப்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக அளவில் உள்ள தொழிலாளர்களில் 125 கோடி பேர் குறைந்த திறனுடன், குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றுபவர்கள் எனவும், அவர்களின் பொருளாதாரம் மிக மோசமடையும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அன்றாட பணியாளர்கள் மற்றும் சிறு தொழில் புரிவோர்களுக்கு அபாயம் அதிகம் எனப்பட்டுள்ளது