மாந்திரீகம், சூனியம் செய்ததாக குற்றஞ்சாட்டி 3 பெண்கள் உட்பட நான்கு பேரை சூடான இரும்புக் கம்பியால் தாக்கி, அவர்களது வாயில் சிறுநீரை ஊற்றி, மலத்தை உண்ண வைத்த கோர சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரங்கேறியிருக்கிறது.
ஜார்க்கண்டின் தும்கா மாவட்டத்தில் உள்ள சரையாஹத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அஸ்வரி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
இது தொடர்பாக பேசியுள்ள சரையாஹத் காவல்நிலைய ஆய்வாளர் நேவல் கிஷோர் சிங், “மந்திர மாந்திரீகத்தில் ஈடுபட்டதாக கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட நால்வரை இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கி, அவர்களை கட்டாயப்படுத்தி மனிதக் கழிவை உண்ண வைத்திருக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “பெண்கள் கொடூரமாக தாக்கப்பட்டதால் பாதிப்புக்குள்ளான அனைவரும் சரையாஹத் சமூக சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக தியோகருக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.” என்றார்.
பாதிக்கப்பட்டவரகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த கொடூரமான மனிதநேயமற்ற செயலை புரிந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, நடந்த சம்பவம் குறித்து தீவிரமான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல் ஆய்வாளர் கிஷோர் சிங் தெரிவித்துள்ளார்.
காவல் அதிகாரியின் கூற்றுப்படி, இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் 24ம் தேதி நடந்திருப்பதாகவும் போலீசாரின் கவனத்துக்கு மறுநாள் ஞாயிற்றுக்கிழமையே வந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கைதானவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், “தாக்குதலுக்கு ஆளானவர்கள் தங்களது குழந்தையை நோய்வாய்ப்படச் செய்ததார்கள்” எனக் கூறியிருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து, முதலில் மலத்தை உண்ணும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களால் சூடான இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதாகவும் புகார்தாரரின் குற்றச்சாட்டுகள் சரியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த புகாரை சூனிய தடை சட்டம் 3/4 மற்றும் தாக்குதலின் கீழ் பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதனிடையே சம்பவம் நடந்த அஸ்வரி கிராமத்தில் மோசமான நிலமையாக இல்லாவிட்டாலும் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.