மருத்துவமனையில் ரீல்ஸ் எடுத்த பயிற்சி மருத்துவர்கள் pt desk
இந்தியா

கர்நாடகா: மருத்துவமனை வளாகத்தில் ரீல்ஸ் எடுத்த விவகாரம் - 38 பயிற்சி மருத்துவர்கள் சஸ்பெண்ட்

கர்நாடக மாநிலம் கதக் மருத்துவ அறிவியல் கழகத்தின் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் ரீல்ஸ் எடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் 38 பேரை ஒரு வாரம் பணியிடை நீக்கம் செய்து, மருத்துவமனை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

webteam

கர்நாடக மாநிலத்திலுள்ள ஜிம்ஸ் என்ற கதக் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையின் நடைபாதையில் கன்னடம், ஹிந்தி பாடல்களுக்கு நடனமாடிய பயிற்சி மருத்துவர்கள், அதை ரீல்ஸாக பதிவுசெய்து, தங்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். இது வேகமாக பரவியதை அடுத்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

மருத்துவமனையில் ரீல்ஸ் எடுத்த பயிற்சி மருத்துவர்கள்

‘மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் ஏழை நோயாளிகள்படும் துன்பம் ஒரு பக்கம், பயிற்சி மருத்துவர்களின் கேலி ரீல்ஸ்கள் மறுபக்கம்.... ரீல்ஸ் தயாரிக்க அவர்களுக்கு வேறு இடமே கிடைக்கவில்லையா?’ என பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதையடுத்து இச்சம்பவம் ஜிம்ஸ் இயக்குனர், மருத்துவர் பசவராஜா பொம்மனஹள்ளி கவனத்துக்கு சென்றுள்ளது.

தொடர்ந்து அவர் சம்பந்தப்பட்ட 38 பயிற்சி மருத்துவர்களையும் அழைத்து விசாரணை மேற்கொண்டார். பின் மருத்துவமனை வளாகத்தில் ரீல்ஸ் செய்த 38 பேரையும் ஒரு வாரம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டடர்.

மருத்துவமனையில் ரீல்ஸ் எடுத்த பயிற்சி மருத்துவர்கள்

இதுதொடர்பாக பேசியுள்ள அவர், “மருத்துவமனையில் இப்படி செய்வது பெரிய குற்றம். நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அவர்கள் நடந்து கொண்டது தவறு. ரீல்ஸ் செய்தவர்கள் அனைவரும் எம்.பி.பி.எஸ் முடித்து, பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றுகின்றனர்.

இதுபோன்ற வீடியோவை உருவாக்க நாங்கள் யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. வரும் நாட்களில் மருத்துவமனைகளில் இதுபோன்று செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.