நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், வரும் ஜூலை 19ம் தேதி முதல் ஆகஸ்ட் 13 ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக மக்களவையை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் 311 பேர் தங்களின் இரு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டிருப்பதாக, சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
மேலும் பேசுகையில், “அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டாலும்கூட, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்கான 24 மணி நேர 19 ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மையங்கள் நாடாளுமன்றத்துக்குள் அமைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களில் 23 பேர் மட்டும், சில தனிப்பட்ட காரணங்களுக்காக தடுப்பூசி போடாமல் இருக்கின்றனர்.
கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களிடையே முறையாக சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும்; இந்த கூட்டத் தொடரை இந்த கொரோனா காலத்தில் சுமூகமாக நடத்துவது சற்று சவாலானதாகவே இருக்கிறது. ஆகவே, அனைத்து மட்டத்திலும் முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தப்படுத்தியுள்ளோம்.
அதனொரு பகுதியாக மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போதுவரை மக்களவை செயலகத்தின் தகவலின்படி 500 மக்களவை உறுப்பினர்கள் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியாவது எடுத்துக்கொண்டுள்ளனர். நாடாளுமன்றத்தின் பிற பணியாளர்கள் அனைவரும்கூட தடுப்பூசி எடுத்துக்கொண்டிருக்கிறனர்” எனக்கூறினார்.