உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3,350 டன் அளவுள்ள 2 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவில் தற்போது கையிருப்பு உள்ள மொத்த தங்கத்தை விட 5 மடங்கு அதிகமாகும்.
இந்திய புவியியல் ஆய்வு மையம் தங்கச் சுரங்கம் தொடர்பாக பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறது. இந்தியா முழுவதும் பல சோதனைகளை செய்துள்ள ஆய்வு மையத்தின் முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சோன்பத்ராவில் இரண்டு பெரிய தங்கச் சுரங்கங்களை புவியியல் ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மையத்துடன் இணைந்து உத்தரப்பிரதேச புவியியல் மற்றும் சுரங்க இயக்குநரகம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
அதன்படி இந்தச் சுரங்கங்களில் 3,350 டன் அளவுள்ள தங்க படிமங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோன்பாஹ்தி என்ற இடத்தில் 2700 டன் அளவுள்ள தங்க படிமங்களும், ஹார்டி என்ற சுரங்கத்தில் 650 டன் தங்க படிமங்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவின் கையிருப்பில் 626 டன் தங்கம் உள்ள நிலையில் இப்போது கிடைத்துள்ள தங்க அளவு கையிருப்பைவிட 5 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.
தங்கம் மட்டுமின்றி யுரேனியம் போன்ற தாது பொருட்களும் இந்த இடத்தில் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தங்கம் மற்றும் தாது பொருட்கள் கிடைத்தால் மாநில அரசின் வருவாய் பல மடங்கு அதிகரிக்கும் என்றும், மாநிலத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் இது உதவும் என்றும் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகளை பொருத்தவரை அமெரிக்காவிடம் 8133.5 டன் தங்கமும், ஜெர்மனியில் 3366 டன் தங்கமும், ரஷ்யாவிடம் 2241.9 டன் தங்கமும், சீனாவிடம் 1948.3 டன் தங்கமும் கையிருப்பு உள்ளன.