இந்தியா

தெலங்கானா தேர்தல்: 231 பேர் மீது கொலை, ஆள் கடத்தல் வழக்குகள்

தெலங்கானா தேர்தல்: 231 பேர் மீது கொலை, ஆள் கடத்தல் வழக்குகள்

rajakannan

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 231 பேர் மீது கொலை, ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு வரும் 7ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இந்நிலையில், தெலுங்கானாவில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் ஆயிரத்து 777 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 368 பேர் மீது ‌வழக்குகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதிலும் 231 வேட்பாளர்கள் மீது, கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளதாக வேட்பு மனுக்கள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. 

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுபவர்களில் 438 பேர் கோடீஸ்வரர்கள். அதாவது 25 சதவிகித வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இவர்களின் சராசரி‌ சொத்து மதிப்பு, 3 கோடியே 29 லட்சம் என வேட்பு மனு விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. 

அதிகபட்சமாக, மூன்றுகோடி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராஜ்கோபால் ரெட்டி, தனக்கு 314 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். குறைந்தபட்சமாக நிசாமாபாத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் பல்லா ஸ்ரீநிவாஸ் தனக்கு 15 ரூபாய் மட்டுமே சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.