தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்பாக மக்களவைக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதேபோல ஆந்திரப்பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களின் சட்டப்பேரவைகளின் பதவிக்காலமும் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ளது.
இந்த சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.
மக்களவை மற்றும் நான்கு மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதி இன்று மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.
”மக்களவை தேர்தலை நடத்த முழு அளவில் தயாராக உள்ளோம். இந்த ஆண்டில் நடைபெறும் மிக மிக்கியமான செய்தியாளர் சந்திப்பு இது” என்று கூறி பேச்சை தொடங்கினார் ராஜீவ்குமார்.
சுமார் 97 கோடி பேர் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். இதற்காக 12 லட்சத்திற்கும் அதிக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. நக்சலைட் அச்சுறுத்தல் உள்ள பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தலை அமைதியான முறையில் நடத்தவும் அதிகப்படியான வாக்கு சதவீதத்தை எட்டவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
பதற்றம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் கூடுதல் மத்திய பாதுகாப்பு படையினர் அனுப்பப்பட உள்ளனர். மேற்கு வங்கத்தில், வன்முறைகள் இல்லாத வகையில் தேர்தலை நடத்துவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட காவல்துறை மற்றும் ஆட்சியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மிகவும் சவால் நிறைந்ததாக கண்டறியப்பட்டுள்ள இந்த மாநிலங்களை தவிர ஜம்மு காஷ்மீரில், குறிப்பாக சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு முதல்முறை தேர்தல் நடைபெறுவதால் கவனம் பெற்றுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக ஜம்மு காஷ்மீரில் தயார் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்ற இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலையும் மக்களவை தேர்தலுடன் ஒன்றாக நடத்த வேண்டும் என சில கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
ஆனால் ஜம்மு காஷ்மீரில் இரண்டு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெற வாய்ப்பில்லை என இந்த தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019 தேர்தலின்போது மார்ச் 10 ஆம்தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11 தொடங்கி ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23 ஆம் தேதி எண்ணப்பட்டன. இந்த மக்களவைத் தேர்தலை ஏழு கட்டமாக நடத்துவதற்கு ஒரு அட்டவணை தயாராக உள்ளதாகவும், தேவைக்கேற்ப அதிக கட்டங்களாகவோ அல்லது குறைந்த கட்டங்களாகவோ தேர்தல் நடத்த தயாராக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.