இந்தியா

பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு

பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு

webteam

திரிபுராவில் பிறந்து இரண்டு நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கொரோனாவுக்கு உயிரிழந்தது. இது தான் மாநிலத்திலேயே குறைந்த வயது கொரோனா இறப்பு என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக இருந்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதுவரை 36 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை வருத்தம் தரக்கூடியதாக இருந்தாலும், குணமடைந்து செல்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருப்பது ஆறுதலான செய்தி

இந்நிலையில் திரிபுராவில் பிறந்து இரண்டு நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தது. கடந்த வியாழன் அன்று அகர்ட்டலா அரசு மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்தது. பிரசவித்த பெண்ணுக்கு கொரோனா பாசிட்டிவ் என்பதால் பிறந்த குழந்தைக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

அதற்கும் கொரோனா பாசிட்டிவ் என வந்த நிலையில் சனிக்கிழமை குழந்தை உயிரிழந்தது.இது தான் மாநிலத்திலேயே குறைந்த வயது கொரோனா இறப்பு என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. பிறந்து 2 நாட்களில் குழந்தை கொரோனாவுக்கு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரிபுராவில் இதுவரை 5251 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3463 பேர் குணமடைந்துள்ளனர். 23 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் 2 பேர் கொரோனாவால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.