தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட கடலோர மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட வங்காள விரிகுடாவையொட்டிய கடலோர மாநிலங்களில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்தக் கடலோர மாநிலங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது” என தெரிவித்துள்ளது.
இதனிடையே, வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடைவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பருவமழையால் அதிகமாக பாதிக்கப்படும் இடங்கள் கண்டறியப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.