112 என்ற அவசர உதவி எண்ணை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிமுகம் செய்தது.
அமெரிக்காவின் அவசர உதவி எண் 911. காவல்துறை, ஆம்புலன்ஸ், தீயணைப்பு என எந்த வித அவசர தேவையான இருந்தாலும் 911க்கு டயல் செய்தால் போதும். நமக்கு உதவி கிடைக்கும். அதே போல பொதுவான அவசர உதவி எண்ணை நாடு முழுவதும் கொண்டு வர இந்திய அரசும் திட்டமிட்டது. அதன்படி 112 என்ற அவசர உதவி எண்ணை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிமுகம் செய்தது.
டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முன்னிலையில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி 112 அவசர உதவி எண் செயல்பாட்டையும், 112 என்ற செல்போன் செயலியையும் தொடங்கி வைத்தார்.
முதல்கட்டமாக தமிழ்நாடு, ஆந்திரா, உத்ரகாண்ட், பஞ்சாப், கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்திர பிரதேசம், தெலங்கானா, குஜராத், புதுச்சேரி, உள்ளிட்ட 16 மாநிலங்களில் 112 அவசர உதவி எண் சேவை அமலுக்கு வந்தது. பிறகு படிப்படியாக நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 112 என்ற அவசர உதவி எண் ஐரோப்பா உள்ளிட்ட சில நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றது.
இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ''112 என்ற உதவி எண்ணுக்கு டயல் செய்தால் எந்த வித அவசர தேவைக்கும் உதவி கிடைக்கும். இந்த எண்ணில் போலீஸ், தீயணைப்பு, மருத்துவம் மற்றும் அவசர தேவைக்கான உதவிகளும் கிடைக்கும். சில வகை செல்போன்களின் 5 அல்லது 9 எண்களை சில நொடிகள் அழுத்திப்பிடித்தால் நேரடியாக 112க்கு அழைப்பு செல்லும் வகையில் உருவாக்கியுள்ளோம். அதேபோல் சேவைக்காக தொடங்கப்பட்ட இந்த எண்ணை வேடிக்கைக்காக யாரும் பயன்படுத்த வேண்டாம்'' என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் போது பாதுகாப்பான நகர அமலாக்க கண்காணிப்பு இணையதளமும், பாலியல் குற்ற வழக்கு விசாரணை நிலவரத்தை ஆன்லைனில் அறியும் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது.