நேற்று அதிகாலை 3.15 மணியளவில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில், எர்ணாகுளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கேரளா பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதியதில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 50 பேரில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் மரணமடைந்த நடத்துநர் குடும்பம் குறித்து ஒரு உருக்கமான சம்பவம் இப்போது வெளியாகியுள்ளது.
எர்ணாகுளம் மாவட்டம் அருகே உள்ளது வெளியநாடு என்ற சிறிய கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள செயின்ட் பால் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார் மாணவி பவிதா பைஜு. நேற்று காலை தனது பள்ளியில் நடந்த தேர்வுக்குச் சென்றுள்ளார். ஆனால் அவருக்கு அப்போது அவரது அப்பா பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார் என்பது தெரியாது.
பவிதாவின் தந்தை வி.ஆர். பைஜூக்கு 47 வயது. இவர் கேரள போக்குவரத்துக் கழகத்தில் பெங்களூரு-எர்ணாகுளம் இடையேயான தடத்தில் ஓடும் பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வந்தார். அவிநாசி அருகே அவர் ஓட்டி வந்த பேருந்துதான் நேற்று விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பைஜூவும் ஒருவர். அந்தச் செய்தி அவரது குடும்பத்தாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. ஆனால், அவரது மகள் பவிதா, பொதுத் தேர்வுக்கு கிளம்பிக் கொண்டிருந்ததால் இந்தத் தகவலை வீட்டார் அவரிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.
“அவள் பள்ளிக்குச் செல்லும் நேரத்தில் பைஜு உயிரிழந்தார் என்பது அவரது குடும்பத்தினர் சிலருக்குத் தெரிந்தது. ஆனால், நேற்று பவிதா தனது 10 ஆம் வகுப்பு தேர்வில் இருந்ததால் யாரும் அவருக்குத் தெரிவிக்கவில்லை. இந்த விபத்து குறித்து ஒட்டுமொத்த மாநிலமும் பேசியது. இருந்தும் மாலை 5 மணி வரை பவிதாவுக்குத் தெரியாது. மாலை வகுப்பு முடிந்ததும் தோழியின் வீட்டிற்கும் அவர் அழைத்து செல்லப்பட்டார். அங்கிருந்து உறவினரின் வீட்டிற்கும் அழைத்துச் செல்லப்பட்டார். இறுதியாக அப்போதுதான் விஷயத்தை பவிதாவிடம் சொன்னார்கள். அவள் அதிர்ச்சிக்கு ஆளானாள்”என்று எடக்கட்டுவாயல் கிராம பஞ்சாயத்துத் தலைவரும் பைஜுவின் நண்பருமான ஜெஸ்ஸி பீட்டர் ‘நியூஸ் மினிட்’ செய்தி தளத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜெஸ்ஸி “2018 மற்றும் 2019 கேரள வெள்ளத்தின் போது நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க பைஜு எவ்வாறு முன்முயற்சிகளை எடுத்தார் என்பதையும் ஜெஸ்ஸி பகிர்ந்து கொண்டுள்ளார். “இங்கே பைஜூவின் நண்பர்கள் குழு உள்ளது, அவர்கள் அனைவரும் 10 ஆம் வகுப்பில் ஒன்றாகப் படித்தவர்கள். பஞ்சாயத்தில் உள்ள ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அவர்கள் முன்னணியில் இருந்தனர். வெள்ளத்தின் போது, பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதை அவர்கள்தான் ஒருங்கிணைத்து வந்தனர். பைஜுதான் அவர்களை வழிநடத்தினார்”என்று கூறியுள்ளார்.
தந்தை இறந்தது தெரியாமல் மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதச் சென்ற சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.