இந்தியா

"ராஜீவ் காந்தி ஊழலில் நம்பர் ஒன்" விமர்சித்த மோடி, பதில் கொடுத்த சிதம்பரம் !

"ராஜீவ் காந்தி ஊழலில் நம்பர் ஒன்" விமர்சித்த மோடி, பதில் கொடுத்த சிதம்பரம் !

ராகுல் காந்தியின் தந்தை, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நேர்மையானவர் என்று கூறுவார்கள் ஆனால் அவர் தன் வாழ்கையின் இறுதியில் ஊழலில் நம்பர் ஒன்னாக திகழ்ந்தார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.  

உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி "எனது மதிப்பை குறைப்பதற்காகவே ராகுல் காந்தி ரஃபேல் விவகாரத்தில் என்னை ஆதாரமின்றி குற்றஞ்சாட்டி வருகிறார். ஆனால் உங்கள் தந்தை, ராஜீவ் காந்தி நேர்மையானவர் என்று கூறுவார்கள். ஆனால் அவர் ஊழலில் நம்பர் ஒன்னாக மாறினார்" என்று கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்து பேசினார். 

மேலும் தொடர்ந்த மோடி " எனது செல்வாக்கை சிதைத்து, என்னை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள், நாட்டில் நிலையற்ற, பலவீனமாக அரசு அமைய வேண்டும் என விரும்புகிறார்கள். இந்த மோடி, பிறக்கும் போதே தங்க தட்டில் பிறக்கவில்லை, வசதியான குடும்பத்தில் பிறக்கவில்லை" என கூறினார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து பிரதமர் மோடி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார் "திரு மோடி எல்லை மீறி மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து அவதூறாக பேசியுள்ளார். மோடி எதையும் படிப்பதில்லை என நினைக்கிறேன். போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் ராஜீவ் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்று, ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது."

"எனினும், இவ்வழக்கில் ராஜீவ் லஞ்சம் பெற்றார் என்பதற்கு எந்த ஆதரமும் இல்லை என நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ததை, மோடிக்கு நினைவிருக்கிறதா என தெரியவில்லை. இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டாம் என முடிவெடுத்ததும், அப்போதைய பாஜக ஆட்சி என்பதும் மோடிக்கு தெரியுமா ? என பா.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.