இந்தியா

“சாத்வி பிரக்யாவை என் இதயம் மன்னிக்காது” - மோடி ஆவேசம்

“சாத்வி பிரக்யாவை என் இதயம் மன்னிக்காது” - மோடி ஆவேசம்

webteam

காந்தியைக் கொன்ற கோட்சே ஒரு தேச பக்தர் என்ற சாத்வி பிரக்யாவின் கருத்துக்கு மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். 

கமல்ஹாசனின் கோட்சே குறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த சாத்வி பிரக்யா சிங், “நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தராக இருந்தார். அவர் தேசபக்தராகவே இருக்கிறார். தேசபக்தராகவே இருப்பார். கோட்சேவை தீவிரவாதி என்று கூறியவர்களுக்கு இந்தத் தேர்தலில் தக்க பதிலடி கொடுக்கப்பட வேண்டும்” என்று கூறியிருந்தார். அவரது கருத்துக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என சாத்வி பிரக்யா சிங் தாகூர் கூறியதற்கு பாஜகவும் கண்டனம் தெரிவித்தது. கோட்சே பற்றி சாத்வி பிரக்யா சிங் கூறிய கருத்தில் பாஜகவிற்கு உடன்பாடு இல்லை என்றும் இது தொடர்பாக பிரக்யா சிங்கிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் பாஜக செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் கூறியிருந்தார். 

இதையடுத்து தம்முடைய கருத்துக்கு சாத்வி பிரக்யா சிங் மன்னிப்பு கோரியுள்ளார்.“நான் பாஜகவின் உண்மையான சேவகி, கட்சி மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். கட்சியின் நிலைப்பாடு என்னவோ, அதுவே தம்முடைய நிலைப்பாடு. கோட்சே பற்றிக் கூறியது எனது தனிப்பட்ட கருத்து.  யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. யார் மனதாவது புண்படும்படி பேசியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன். நாட்டுக்கு காந்தி செய்த பணிகளை யாரும் மறக்க முடியாது. தனது பேச்சை ஊடகங்கள் திரித்து வெளியிட்டு விட்டது” என்று பேசினார்.

இதைத்தொடர்ந்து கேட்சே ஒரு தேசபக்தர் என கூறியதற்கு பிரக்யா உள்ளிட்ட 3 பேருக்கு பாஜக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், காந்தியைக் கொன்ற கோட்சே ஒரு தேச பக்தர் என்ற சாத்வி பிரக்யாவின் கருத்துக்கு மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். சாத்வி பிரக்யாவின் கருத்து மன்னிக்க முடியாத குற்றம் என தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி தெரிவித்துள்ளார். 

“காந்தி மற்றும் கோட்சே குறித்த கருத்துக்கள் மிகவும் வருத்தத்திற்குரியது. இதுபோன்ற கருத்துக்களை பேசுவோர் 100 முறை யோசித்து பேச வேண்டும். அவர் மன்னிப்பு கேட்டிருப்பது ஒரு வித்தியாசமான பிரச்னை. ஆனால் சாத்வி பிரக்யாவை என் இதயம் மன்னிக்காது” என மோடி தெரிவித்தார்.