இந்தியா

''அதிர்ச்சியாக இருக்கிறது' '- பீகார் சம்பவத்தில் கேள்விகளை அடுக்கிய நீதிமன்றம்!!

''அதிர்ச்சியாக இருக்கிறது' '- பீகார் சம்பவத்தில் கேள்விகளை அடுக்கிய நீதிமன்றம்!!

webteam

பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு ரயில்வே நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 27 வயது மதிக்கத்தக்கப் பெண், புலம்பெயர்ந்தோருக்கான சிறப்பு ரயில் மூலம் கடந்த திங்கள்கிழமை பீகாருக்கு குடும்பத்தினருடன் வந்திருக்கிறார்.

கடுமையான வெயில், போதிய உணவு, குடிப்பதற்கான குடிநீர் இல்லாததால் அந்தப் பெண் இறக்க நேர்ந்ததாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். மேலும் அவரது குடும்பத்தார் கொடுத்துள்ள தகவலின்படி இந்தக் குடும்பம் குஜராத்திலிருந்து புறப்பட்டதாகவும் திங்களன்று முசாபர்பூர் ரயில் நிலையத்திலிருந்து ரயிலை எடுப்பதற்கு முன் இப்பெண்ணின் உடல்நிலை சரியில்லாமல் சரிந்ததாகத் தெரியவந்துள்ளது. இறந்த அம்மாவை எழுப்பும் குழந்தையின் வீடியோ அதிர்வலையை ஏற்படுத்தியது.



இதனிடையே அந்தப் பெண் உடல்நிலை சரியில்லாமல்தான் இறந்தார் என்று ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்தது. அவர் இறந்த பின்னர் அக்குடும்பத்தினர் முசாபர்பூர் நிலையத்தில் இறங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர் என்றும் கூறியது. மேலும் இறந்து போன அந்தப் பெண், தனது சகோதரி, சகோதரியின் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கதிஹார் சென்று கொண்டிருந்ததாக அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கும் துரதிர்ஷ்டவசமானது என பாட்னா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுள்ளது. அதில், உடற்கூறாய்வு செய்யப்பட்டதா? உண்மையில் அந்தப்பெண் பசியால் இறந்தாரா? அவரது இறுதிச்சடங்கானது அவர்களது பாரம்பரிய முறைப்படியும் அரசாங்கத்தின் வழிமுறைப்படியும் நடந்ததா? அந்தக் குழந்தைகளை தற்போது பாதுகாப்பது யார்? என பல கேள்விகள் கேட்கப்பட்டன. நீதிமன்றத்தின் கேள்விக்கு, பீகார் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் யாதவ் பதிலளித்தார். விளக்கங்களை கேட்ட நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்றுக் கூறி வழக்கை ஜூன் 3க்கு ஒத்திவைத்தது.