இந்தியா

முகக் கவசங்களில் இருந்து மறுசுழற்சி செங்கற்கள்...குஜராத் இளைஞரின் புதுமை முயற்சி

முகக் கவசங்களில் இருந்து மறுசுழற்சி செங்கற்கள்...குஜராத் இளைஞரின் புதுமை முயற்சி

webteam

நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் மக்களால் பயன்படுத்தப்படும் முகக்கவசங்களும், கையுறைகளும், கொரோனா பாதுகாப்புக் கவச உடைகளும் கடல்போல குவிந்து வருகின்றன. அதனை மறுசுழற்சி முறையில், ரீசைக்கிள் மேன் ஆப் இந்தியா என அழைக்கப்படும் பினிஷ் தேசாய், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத செங்கற்களாக உருவாக்கியுள்ளார்.

ஏற்கெனவே, அவர் தொழிற்சாலைக் கழிவுகளைக் கொண்டு கற்களைத் தயாரித்து சாதனை படைத்திருக்கிறார். சுற்றுச்சூழல் மற்றும் புதுமைகள் படைப்பதில் ஆர்வம் கொண்டவரான குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பினிஷ் தேசாய் (வயது 27), இந்தியாவில் பெருகிவரும் கொரோனா மருத்துவக் கழிவுகளை மறுசுழற்சி முறையில் பயன்படுத்துவதற்கான ஒரு தீர்வைக் கண்டுள்ளார்.

முகக்கவசங்கள், பிபிஇ எனப்படும் பாதுகாப்புக் கவச உடைகளை மறுசுழற்சி மூலம் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத செங்கற்களை, தேசாய் தயாரிக்கத் தொடங்கியுள்ளார். தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் தினமும் கொரோனாவுடன் தொடர்புடைய 101 மெட்ரிக் டன் பயோமெடிக்கல் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.

சாதாரணமாக தினமும் பயோமெடிக்கல் கழிவுகள் 609 மெட்ரிக் டன் அளவில் வெளியாகின்றன. தற்போது அதில் கொரோனா மருத்துவக் கழிவுகளும் கூடுதலாகச் சேர்ந்துள்ளன. மறுசுழற்சி முறையில் கற்களைத் தயாரிப்பதற்கு 52 சதவீதம் பிபிஇ மற்றும் முகக்கவசக் கழிவுகளையும், 45 சதவீதம் காகிதக் கழிவுகளையும் பயன்படுத்துகிறார்.

அந்த கற்கள் தண்ணீர் மற்றும் தீயால் பாதிக்கப்படாதவையாகவும், பூச்சிகளால் தாக்கமுடியாதவையாகவும் உள்ளன. இந்த கொரோனா மருத்துவக் கழிவுகளை மருத்துவமனைகள், காவல்நிலையங்கள் மற்றும் பிற இடங்களில் இருந்து சேகரிக்க, சூழல் குப்பைத் தொட்டிகளை வைக்கவும் பினிஷ் தேசாய் திட்டமிட்டு வருகிறார்.