இந்தியா

”உயிருடன் திரும்பியதற்கு நன்றி என பிரதமர் சொல்லி இருக்கக்கூடாது”- ராஜஸ்தான் முதல்வர்

”உயிருடன் திரும்பியதற்கு நன்றி என பிரதமர் சொல்லி இருக்கக்கூடாது”- ராஜஸ்தான் முதல்வர்

நிவேதா ஜெகராஜா

“‘உயிருடன் திரும்பியதற்கு, உங்கள் முதல்வருக்கு நன்றி’ என்பது போன்ற கருத்தை பிரதமர் வைத்திருக்ககூடாது” என்று கருத்து கூறியுள்ளார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்.

நேற்றைய தினம் பிரதமர் மோடி ஃபெரோஸ்பூரில் ஒரு பேரணியில் உரையாற்ற திட்டமிட்டிருந்தார். அதற்காக ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி செல்லவிருந்தார். ஆனால், மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, அவர் வான் வழியாகப் பயணம் செய்வது தவிர்க்கப்பட்டது. அதனால் அவர் சாலை மார்க்கமாக பயணம் செல்ல திட்டமிட்டார். ஆனால் சாலை வழியாக பிரதமர் மோடி சென்றபோது வழியில் இருந்த கன்வாயை விவசாயிகள் மறித்து பிரதமரை தடுத்துவிட்டனர். இதனால் பிரதமர் மற்றும் அவரின் பாதுகாப்பு வாகனங்கள் மேம்பாலத்தில்  சுமார் 20 நிமிடங்கள் சிக்கிக்கொண்டது. இதனால் பிரதமரின் பயணம் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பஞ்சாப் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, பதிண்டா விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி சென்றார் பிரதமர். இதில் பதிண்டா விமான நிலையத்தை சென்றடைந்தவுடன், அதிகாரிகளிடம் “பத்திண்டா விமான நிலையத்திற்கு நான் உயிருடன் திரும்பியதற்கு உங்கள் முதல்வருக்கு நன்றி" என தெரிவித்துள்ளார். பிரதமரின் இந்த வார்த்தைகள், பெரும் விவாதத்தை கிளப்பியது. சம்பந்தப்பட்ட பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால், இவ்விவகாரம் இருகட்சி மோதலின் வெளிப்பாடாகவும் பொதுவெளிகளில் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில், ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான அஷோக் கெலாட், இவ்விவகாரம் குறித்து பேசியுள்ளார். அவர் தெரிவித்துள்ள தகவலின்படி, “காங்கிரஸ் சார்பாக, பிரதமரிடம் ‘பிரதமரின் பாதுகாப்பென்பது, ஒவ்வொருவரின் பொறுப்பும்தான்’ என்று சொல்ல விரும்புகிறோம்.

நேற்றைய தினம் நடந்த ஒரு நிகழ்வில், எதிர்பாராவிதமாக அரசியல் செய்யப்பட்டு வருகின்றது. பிரதமரும், ‘உயிருடன் திரும்பியதற்கு, உங்கள் முதல்வருக்கு நன்றி’ என்பதுபோன்ற கருத்தை வைத்திருக்ககூடாது” என்று கூறியுள்ளார்.