தனது பணத்தை நிபந்தனையின்றி எடுத்துக்கொண்டு, கடன் விவகாரத்தை முடிக்குமாறு தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வங்கிக் கடன் பெற்று மோசடி செய்ததாகத் தேடப்படும் தொழிலதிபர்களில் முக்கிய இடத்தில் உள்ளவர் விஜய் மல்லையா. இவரை இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்த இந்திய அரசு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேசமயம் விஜய் மல்லையாவும் சட்டரீதியாக இந்திய அரசுக்கு எதிராக வாதம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இந்தியப் பிரதமரும், மத்திய நிதியமைச்சரும் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தை விஜய் மல்லையா ட்விட்டரில் பாராட்டியுள்ளார். கொரோனா மீட்டு நடவடிக்கையாக அரசு அறிவித்த நிவாரண திட்டத்தை வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ளார்.
அரசு வேண்டுமானால் பணத்தை அச்சடித்துக்கொள்வதாகவும், ஆனால் தன்னைப்போன்ற சிறிய பங்களிப்பாளர் வங்கிகளில் 100% கடனை திருப்பி செலுத்துவதாகத் தெரிவித்தாலும் அதற்கு மறுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது பணத்தை எந்தவித நிபந்தனையும் இன்றி எடுத்துக்கொண்டு, விவகாரத்தை முடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.