இந்தியா

“ராமரின் வம்சாவளி நாங்கள் தான்” - உரிமை கொண்டாடும் அரச குடும்பம்

“ராமரின் வம்சாவளி நாங்கள் தான்” - உரிமை கொண்டாடும் அரச குடும்பம்

webteam

ராமரின் வம்சாவளி தாங்கள் தான் என ஜெய்ப்பூர் அரச குடும்பத்தினர் உரிமை கொண்டாடியுள்ளனர்.

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றதில் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணை செய்து வருகிறது. அப்போது, ராமரின் வம்சாவளிகள் இன்னும் ‌அயோத்தியில் வசித்து வருகிறார்களா என கடந்த வெள்ளிக்கிழமையன்று நீதிபதிகள் கேட்டனர். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரச குடும்பத்தைச் சேர்ந்தவரும், பாஜக எம்பியுமான தியா குமாரி, தான் ராமரின் வம்சாவளி என்று தெரிவித்துள்ளார். 

ராமரின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் வசித்து வருவதாக தெரிவித்துள்ள அவர், தாங்கள் ராமரின் மகன் குகாவின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார். அதற்கா‌ன கையெழுத்து பிரதிகள், மரபணு ஆதாரங்கள், ஆவணங்க‌ள் உள்ளிட்டவை அரச குடும்பத்திடம் உள்ளதாகவும் கூறியுள்ளார். தேவைப்பட்டால் ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து நிரூபிப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம், நீதிமன்றத்தின் விசாரணையில் தான் தலையிடமாட்டேன் என்றும், வழக்கு விசாரணை விரைவாக நடைபெற்று தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.