இந்தியா

"சிறுகச்சிறுக சாகடிப்பதற்கு பதில் மொத்தமாக அழித்துவிடுங்கள்"- காற்றுமாசு குறித்து உச்சநீதிமன்றம் காட்டம்

"சிறுகச்சிறுக சாகடிப்பதற்கு பதில் மொத்தமாக அழித்துவிடுங்கள்"- காற்றுமாசு குறித்து உச்சநீதிமன்றம் காட்டம்

jagadeesh

டெல்லி மக்களை காற்று மாசால் சிறுகச்சிறுக சாகடிப்பதற்கு பதில் அவர்களை ஒரேயடியாக குண்டு போட்டு அழித்துவிடலாம் என உச்ச நீதிமன்றம் பஞ்சாப், ஹரியானா மாநில அரசுகளிடம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் தீபக் குப்தா ஆகியோர் கடும் அதிருப்தியை தெரிவித்தனர். விவசாயக் கழிவு எரிப்பை நிறுத்துமாறு ஹரியானா, பஞ்சாப் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட பின்னரும் அச்செயல் தொடர்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 

இதை எவ்வாறு பொறுத்துக் கொள்வது. இது உள்நாட்டு போரை விட மோசமான விஷயம் இல்லையா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். காற்று மாசு நிறைந்த ஒரு அறைக்குள் டெல்லி மக்கள் இருப்பதாகவும் இவ்வாறு அவர்களை சிறுகச்சிறுக சாக விடுவதை விட குண்டு போட்டு ஒரேயடியாக அழித்துவிடலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். டெல்லி காற்று மாசு மற்றும் தண்ணீர் மாசு விவகாரத்தில் மத்திய அரசும் மாநில அரசுகளும் மாறிமாறி குற்றஞ்சாட்டி வருவதாகவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். 

மக்களுக்கு தரமான காற்றும் நீரும் வழங்க முடியாவிட்டால் அவர்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு நாங்கள் ஏன் உத்தரவிடக்கூடாது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தங்களது இந்த கேள்விக்கு 6 வாரத்திற்குள் பதில் தருமாறு பஞ்சாப், டெல்லி, ஹரியானா ஆகிய மும்மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.