சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் தெல்டும்டேவை விடுதலை செய்ய புனே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலம் பீமா கோரேகான் பகுதியில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம், எல்கர் பரிஷத் என்ற அமைப்பு கூட்டம் ஒன்றை நடத்தியது. மாவோயிஸ்டுகள் ஆதரவு தெரிவித்த இந்தக் கூட்டத்தில் பேசிய சமூக செயற்பாட்டாளர்கள், சர்ச்சைக்குரியை கருத்துக்களை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதற்கு அடுத்த நாள், அங்கு நடத்தப்பட்ட பட்டியலினத்தவர் பேரணியில் கலவரம் ஏற்பட்டது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் அங்கு நடந்தன.
இந்தக் கலவரத்துக்கு எல்கர் பரிஷத் அமைப்பு நடத்திய கூட்டம்தான் காரணம் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அந்தக் கூட்டத்தில் பேசிய சமூக செயற்பாட்டாளர்கள், வரவர ராவ், வெர்னோம் கான்ஸல்வாஸ், அருண் பெரேரா உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வீட்டில் ரெய்டும் நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் அம்பேத்கரியல் ஆய்வாளரும் பேராசிரியரும் சமூக செயற்பாட்டாளமான ஆனந்த் தெல்டும் டே மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக அவர், உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் பிப்ரவரி 11 ஆம் தேதி அவரை கைது செய்யக் கூடாது என்றும் அதே நேரம் கீழமை நீதிமன்றங்களில் முன் ஜாமின் கோரலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
இதனையடுத்து, போலீசார் தன்னை கைது செய்யக்கூடும் என்று நினைத்த ஆனந்த் தெல்டும்டே, முன் ஜாமின் கோரி புனே, செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதற்கு போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். பின்னர், முன் ஜாமின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில், கேரளாவில் இருந்து இன்று காலை 3.30 மணிக்கு மும்பைக்கு வந்த ஆனந்த் தெல்டும்டே, விமான நிலையத்தில் புனே போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, இந்தக் கைது நடவடிக்கை தொடர்பாக புனே நீதிமன்றத்தில், அவர் தரப்பு வழக்கறிஞர் முறையிட்டார்.
இந்நிலையில், சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் தெல்டும்டேவை விடுதலை செய்ய புனே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 11 ஆம் தேதி கைது செய்ய, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஆனந்த் தெல்டும்டே கைது செய்யப்பட்டது, சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.