இந்தியா

திருமலை பேருந்து டிக்கெட்டில் ’ஜெருசலேம்’ விளம்பரம்: ஆந்திராவில் சர்ச்சை!

திருமலை பேருந்து டிக்கெட்டில் ’ஜெருசலேம்’ விளம்பரம்: ஆந்திராவில் சர்ச்சை!

webteam

திருப்பதியில் இருந்து திருமலை செல்லும் பேருந்து டிக்கெட்டின் பின்னால் ஜெருசலேம், ஹஜ் யாத்திரை பற்றிய விளம்பரங்கள் இடம்பெற்றிருப்பதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

திருப்பதி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்துசெல்கின்றனர். இதற்காக திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் வழங்கப்படும் டிக்கெட்டுகளின் பின்னால், ஜெருசலேம் மற்றும் ஹஜ் புனித யாத்திரை பற்றிய விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் குடும்பத்துடன் ஜெருசேலம் சென்று வந்துள்ளார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி. இதையடுத்து இந்த டிக்கெட் பிரச்னையை கையில் எடுத்துள்ள பாஜக, இந்துக்களின் மனம் புண்படும்படியாக இந்த விளம்பரங்கள் இதில் இடம்பெற்றுள்ளது என்று கண்டனம் தெரிவித் துள்ளது. 

அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜெகன்மோகன் ரெட்டியிடம் குத்துவிளக்கு ஏற்கக் கூறியதாகவும் அதை அவர் ஏற்ற மறுத்துவிட்டார் என்பதையும் குறிப்பிட்டுள்ள பாஜக, இந்துக்களுக்கு எதிராகவே அவர் செயல்பட்டு வருதாகத் தெரி வித்துள்ளது.இந்தச் சர்ச்சை ஆந்திராவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அம்மாநில அறநிலையத்துறை அமைச்சர் வெல்லம்பள்ளி ஸ்ரீனிவாசன், பேருந்து டிக்கெட் அச்சடிப்பதற்கான ஒப்பந்தத்தை முந்தைய அரசுதான் வழங்கியது என்றும் அது தொடர்பாக போக்குவரத்து துறையிடம் விசாரணை நடந்து வருகிறது’ என்றும் தெரிவித்துள்ளார்.