தனக்கு பாதுகாப்பு இல்லையென்பதால் உத்தரப்பிரதேசத்திற்கு திரும்பி செல்ல விருப்பமில்லை என்று சட்டக்கல்லூரி மாணவி உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் உள்ள சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர் வீடியோ பதிவு ஒன்றினை வெளியிட்டு இருந்தார். அதில் தனது கல்லூரி நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் சிலர் பெண்களிடம் அத்துமீறியதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். அந்த வீடியோவில் அவர் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.
பின்னர், அந்த மாணவி மாயமானார். அந்தப் பெண் பயிலும் கல்லூரியின் நிர்வாகக் குழுவின் தலைவராக பாஜக முன்னாள் அமைச்சர் சுவாமி சின்மயானந்தா இருக்கிறார். இதனையடுத்து, அந்த பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், சுவாமி சின்மயானந்தா மீது உத்தரப் பிரதேச போலீஸார் கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக சிறை வைத்தல் வழக்குகள் பதிவு செய்தனர். இதனிடையே, அந்த மாணவி ராஜஸ்தானில் கண்டயறியப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. பெற்றோரை டெல்லிக்கு வரச்சொல்லுங்கள். தன்னால் திரும்பி செல்ல முடியாது என்று அந்த பெண் நீதிபதிகளிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, நீதிபதி பானுமதி கூறிய போது, “அந்த பெண் டெல்லியிலே இருக்க விரும்புகிறார். அவரது பெற்றோர் டெல்லிக்கு வந்தவுடன் சந்திப்பதாக கூறியுள்ளார். அவரது பெற்றோர் வந்த பிறகு அவர்களிடம் பேசிவிட்டு அடுத்து என்ன செய்வது என்பது குறித்து அவர் முடிவு எடுக்கட்டும். டெல்லி போலீஸ் கமிஷ்னர் ஒரு குழுவை அனுப்பி அவரது பெற்றோர் ஷாஜஹன்பூரில் இருந்து எவ்வித சிக்கலும் இல்லாமல் டெல்லிக்கு வந்து அவரை பார்க்க முடியுமா என்பதை உறுதி செய்யுங்கள்” என்றார்.
இந்த வழக்கில் நீதிபதிகள் தங்களது கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை. அந்த பெண்ணின் பாதுகாப்பு குறித்து மட்டும் பேசியுள்ளனர். இதனையடுத்து வருகின்ற திங்கட்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.