இறுதிச் சடங்கு முடிந்து உடலை புதைத்த நிலையில் உயிரோடு வந்த இளைஞரால், அவரது குடும்பம் இன்ப அதிர்ச்சி அடைந்தது.
கேரள மாநிலம் வயநாடு அருகில் உள்ள ஆடிகொள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சஜி (வயது 48). கூலி வேலை பார்த்துவந்த இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் வசிக்கும் பகுதி கர்நாடக எல்லையை ஒட்டி உள்ளது. திடீர் திடீரென்று வீட்டை விட்டு வெளியேறும் சஜி, கர்நாடகாவில் ஏதாவது வேலை பார்த்துவிட்டு நான்கைந்து நாட்கள் கழித்து வீட்டுக்கு வருவதை வழக்கமாக வைத்திருப்பார்.
இந்நிலையில் கடந்த மாதம் 3 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய அவர், பின்னர் வீட்டுக்குத் திரும்பவில்லை. வழக்கமான நாட்களை விட அதிக நாட்கள் அவர் காணாமல் போனதால் போலீசில் புகார் செய்தனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் பைரகுப்பா என்ற பகுதியில் சஜியை பார்த்ததாக சிலர் அவர் குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர். இதற்கிடையே, பைரகுப்பா காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.
அந்த உடலை சஜியின் குடும்பத்தினரிடம் போலீசார் காட்டினர். சஜியின் சகோதரர் ஜினேஷ், இது அவர் உடல்தான் என்பதை உறுதியாகச் சொன்னார். முகம் சிதைந்த நிலையில் இருந்த அந்த உடலின் காலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருப்பதற்கான அடையாளம் தெரிந்தது. சஜிக்கும் அப்படியொரு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருந்ததால் அது சஜிதான் என்று உறுதி செய்தனர்.
பிறகு வழக்கமான போலீஸ் நடைமுறை முடிந்து, உடலை அடிக்கொள்ளி புனித செபாஸ்டியன் தேவாலய கல்லறையில் புதைத்து விட்டனர். இது முடிந்து 15 நாட்கள் ஆகிவிட்டது.
இந்நிலையில் திடீரென்று வீட்டுக்கு வந்துள்ளார் சஜி. அவரைக் கண்டதும் குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி. என்ன செய்வதென்று தெரியவி ல்லை. பிறகு நடந்த விஷயத்தை அவரிடம் கூறியதும் அவரும் அதிர்ச்சி அடைந்தார். அப்படியென்றால் இறுதிச் சடங்கு செய்தது யாருடைய உடல்? என்று கேள்வி எழ, போலீஸ் ஸ்டேஷனில் மீண்டும் புகார் கொடுத்துள்ளார் சஜி.
இதற்கிடையே, சஜி என்று புதைக்கப்பட்ட உடலை வெளியே எடுக்குமாறு தேவாலயம் சார்பில் அவரது குடும்பத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் குடும்பம், புது சிக்கலை சந்தித்துள்ளது.