இந்தியா

“முகமது ஜூபைரை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பதில் நியாயம் இல்லை” - உச்சநீதிமன்றம்

“முகமது ஜூபைரை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பதில் நியாயம் இல்லை” - உச்சநீதிமன்றம்

ச. முத்துகிருஷ்ணன்

சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதள பதிவுகளை பதிவிட்டதாக பத்திரிக்கையாளர் முகமது ஜூபைர் மீது உத்தரபிரதேச காவல்துறையினரால் பல்வேறு காலகட்டங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் ஒவ்வொரு வழக்கிலும் சமீபமாக அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ராஸ், ஜாஜியாபாத், முசாபர்நகர், லக்கீம்பூர், சீத்தார்பூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 6 முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்யக்கோரி முகமது ஜுபைர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் இந்த ஆறு வழக்கிலும் தனக்கு ஜாமின் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று இந்த அனைத்து வழக்குகளிலும் முகமது ஜூபைருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். உத்தரப்பிரதேசத்தின் பதிவு செய்யப்பட்ட இந்த ஆறு வழக்குகளும் டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவு பிறப்பித்தார்.

“2018 ஆம் ஆண்டு பதிவிடப்பட்ட ட்விட்டர் பதிவிற்கான டெல்லி காவல்துறை கைது நடவடிக்கையில் பாட்டியாலா நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஆனால் அதே பதிவிற்காக வேறு காவல் நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகள் காரணமாக ஜூபைர் இன்னும் சிறையில் இருப்பதில் நியாயம் இல்லை என்று கருதுகிறேன். இது பாட்டியாலா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தடுப்பது போல இருப்பதால் அவருக்கு ஜாமின் வழங்கி, இந்த வழக்குகளை டெல்லி காவல்துறைக்கு மாற்றுகிறேன். அவரை உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவிடுகிறேன் ” என்றார் தலைமை நீதிபதி.