திருமயம் கோட்டை PT
இந்திய பாரம்பரிய இடங்கள்

வரலாறு அறிவோம்: ஊமைத்துரை ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்ட திருமயம் கோட்டை!

சேதுபதி மன்னர்கள் மட்டும் அல்லாது பாண்டியர்கள், சோழர்கள், பல்லவர்கள் ஆகியோர் அந்தந்த காலத்தில் இவ்வூரை ஆட்சி செய்து வந்தனர். அதில் பல்லவர்களால் கட்டப்பட்ட குடவரை கோவில்கள் திருமயத்தின் பெருமையை உரைக்கும் ஒரு சான்றாகும்.

Jayashree A

திருமயம் கோட்டை - அனைவரும் அவசியம் பார்க்கவேண்டிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடம். புதுக்கோட்டைக்கும் காரைக்குடிக்கும் நடுவில் இது உள்ளது. முத்திரையர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர அரசர்கள், மற்றும் இராமநாதபுர சேதுபதிகள் என்று பலரும் இவ்வூரை ஆட்சி செய்து வந்துள்ளனர்.

7ம் நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவர் காலத்தில், சத்யகிரிஸ்வரர் என்ற சிவன் கோவிலும், சத்யமூர்த்தி என்ற பெருமாள் கோவிலும் கோட்டையின் பின்புறம் ஒரு சிவலிங்கமும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவையாவும் இங்கு மலையை குடைந்து குடவரைக் கோவில்களாக கட்டப்பட்டுள்ளன. இங்கு காணப்படுகின்ற 7ம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றில் இந்திய இசைப்பற்றி எழுதப்பட்டுள்ளது.

இருப்பினும் 16, 17ம் நூற்றாண்டுகளில் சேதுபதி நாட்டின் வட எல்லையான திருமய கோட்டையானது கிழவன் ரகுநாத சேதுபதியினால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இவருக்கு பின் ஆட்சிக்கு வந்த முத்து விஜயரகுநாத சேதுபதி தனது ராணுவ பிரிவை 72 ஆக பிரித்த சமயம் திருமயக் கோட்டையை கவனத்தில் கொண்டு கமுதி என்ற ஊரில் திருமயக்கோட்டையைப் போல் வட்ட வடிவ மூன்று சுற்று மதில்களுடன் ஒரு கோட்டையை அமைத்தார்.

திருமயம் கோட்டையானது 7 சுற்று மதில் சுவருடன் வட்ட வடிவில் 40 ஏக்கர் இடத்தில் கட்டப்பட்டிருந்தது. பிற்கால ஆங்கிலேயரின் படையெடுப்பால் 3 சுவர்கள் இடிக்கப்பட்டு தற்பொழுது 4 சுற்று மதில் சுவருடன் காட்சி அளிக்கிறது. கோட்டையின் முன்பாக அகழி இருந்ததற்கான சான்றுகள் உள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இக்கோட்டையின் நுழைவாயிலில் இரண்டு பீரங்கிகள் உண்டு. 4 மதில் சுவரை தாண்டி உள்ளே சென்றால் கோட்டையின் உச்சியில் கிழக்கு நோக்கி ஒரு பீரங்கியானது அமைந்துள்ளது.

கட்டபொம்மனின் தம்பியான ஊமைத்துரையை ஆங்கிலேயர்கள் தேடிக் கொண்டிருந்த சமயத்தில் சங்கரபதிக்கோட்டையில் தலைமறைவாக பதுங்கியிருந்தார். மருது சகோதரர்கள் பாளையங்கோட்டைகாரர்கள் ஆகியோர் இணைந்து ஆங்கிலேயரை எதிர்த்தார்கள். அப்போது ஊமைத்துரை ஆங்கிலேயரால் இக்கோட்டையில் கைதுசெய்யப்பட்டார் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய பெருமை மிக்க இக்கோட்டையானது இன்று தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.