உடற்பயிற்சி கூடங்களில் கொடுக்கப்படும் புரோட்டீன் பவுடர்களால் மக்கள் உடல் ரீதியாக பல பிரச்னைகளை சந்திப்பதால் ஜிம்களில் புரோட்டீன் பவுடர்கள் விநியோகிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என கர்நாடக சட்டமன்றத்தில் பாஜக. எம்.எல்.ஏ சதீஷ்ரெட்டி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
“ஏனெனில் சதீஷ் ரெட்டியின் சட்டமன்ற தொகுதியில் சந்தோஷ் குமார் என்ற இளைஞருக்கு ஜிம்மில் கொடுக்கப்பட்ட தரமற்ற புரோட்டீன் பவுடரை சாப்பிட்டதால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. சந்தோஷ் குமாரின் கல்லீரல் மற்றும் இதயம் செயலிழந்திருக்கிறது. இதனால் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் செலவழித்தும் எந்த பயனும் இல்லாமல் சந்தோஷ் குமார் இறந்தே போயிருக்கிறார். ஆகையால் ஜிம்மில் புரோட்டீன் பவுடரை வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும்” என சதீஷ் ரெட்டி கூறியுள்ளார்.
இதனையடுத்து பேசிய சட்டத்துறை அமைச்சர் மாதுசாமிம், “புரோட்டீன் பவுடர் குறித்து விசாரணை மேற்கொண்டு அதற்கு தடை விதிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகரும், “சட்டவிரோதமாக வழங்கப்படும் புரோட்டீன் பவுடருக்கு தடை விதிப்பது பற்றி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், தசைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், சரிசெய்வதற்கும் புரோட்டீன் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. இவை இரண்டும் உடலமைப்புடன் ஒருங்கிணைந்தவை என ஊட்டச்சத்து நிபுணர்களின் கூறியிருக்கிறார்கள்.
“பால் மூலம் இயற்கையாகவே நாம்பெறும் மிகவும் பிரபலமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றே புரதம்தான். இது உடலில் உறிஞ்சப்படும் அமினோ அமிலங்களாக அறியப்படுகிறது. ஜிம்மில் இரும்பு கருவிகளை பம்ப் செய்வதில் பல மணிநேரம் செலவிடுபவர்களுக்கு, புரோட்டீன் ஷேக்குகளின் வடிவத்திலும் புரதம் உட்கொள்ளப்படுகிறது.
ஆனால், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி மக்களுக்குத் தெரியாது. அதிக அளவு புரோட்டீன் ஷேக்குகளை எடுத்துக்கொள்ளும்போது பலர் தலைவலி, முகப்பரு, வீக்கம், குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்த குறுகியகால பக்க விளைவுகள் தவிர, அதிக புரதத்தை நீண்டகாலமாக உட்கொள்வது இதய பிரச்னைகள் போன்ற சில நீண்ட கால பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும்” என ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
புரோட்டீன் சப்ளிமெண்ட்ஸுடன் கூடிய அதிகப்படியான உடற்பயிற்சி மிகவும் ஆபத்தானது. இதனால் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பில் திடீர் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்றும், அதிகப்படியாக புரதத்தை எடுத்துக்கொள்வதால் இதய அரித்மியா மற்றும் திடீர் இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மேலும் உயர் புரத மூலங்களை அதிகளவு உட்கொள்ளும் போது நிறைவுற்ற கொழுப்புகள், ரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிப்பது மற்றும் அதிக ரத்த அமிலத்தன்மையுடன் இணைத்துள்ளதால், புரதம் இதய செயல்பாட்டை பாதிக்கும் எனவும் எச்சரித்திருக்கிறார்கள்.