ஹெல்த்

சினைப்பை நீர்க்கட்டிகள் பற்றிய தவறான தகவல்களும், உண்மையும்

சினைப்பை நீர்க்கட்டிகள் பற்றிய தவறான தகவல்களும், உண்மையும்

Sinekadhara

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்(பிசிஓஎஸ்) என்கிற சினைப்பை நீர்க்கட்டிகள் உலகில் சுமார் 3 முதல் 10% பெண்களுக்கு வரக்கூடியது. டெஸ்டோஸ்டிரோன் அதிகமாக சுரத்தல், கருப்பை விரிவாதல் மற்றும் சீரற்ற மாதவிடாய் போன்ற காரணங்களால் வருகிறது. சினைப்பைக் கட்டிகள் பொதுவாக இருந்தாலும் அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இதனால் பிசிஓஎஸ் பற்றி தவறான எண்ணங்கள் உள்ளன. இந்த கட்டுக்கதைகள் நோயைக் கண்டுப்பித்தல் மற்றும் சிகிச்சை இரண்டையும் பாதிக்கின்றன.

பிசிஓஎஸ் உடல் எடையை அதிகரிக்கும்

பிசிஓஎஸ் வந்தாலே கட்டாயம் எடை அதிகரிக்கும் மேலும் அதைக் குறைப்பது மிகவும் கடினம் என்பது பொதுவான கருத்து. இருப்பினும் பிசிஓஎஸ்க்கும் உடல் எடைக்கும் தெளிவான தொடர்பு இல்லை.

உண்மை என்னவென்றால், வெவ்வேறு உடல் அமைப்பு மற்றும் அளவுகள் கொண்ட பெண்களை பாதிக்கிறது. பிசிஓஎஸ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எடை கூடுவது எடை குறைப்பது என இரண்டுமே கடினம் என்பதற்கு சான்றுகள் உள்ளன. ஆனால், உணவு மாற்றம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையால் உடல் எடையைக் குறைக்கமுடியும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். எடை குறைவாக இருப்பவர்களுக்கு பிசிஓஎஸ் வராது என்று அர்த்தமில்லை.

பிசிஓஎஸ் இருப்பவர்கள் கருத்தரிக்க முடியாது

பிசிஓஎஸ் கருப்பை நுண்ணறைகளை பாதிக்கும் என்பதால் பல இளம்பெண்கள்கூட கருத்தரிக்கவே முடியாது என நம்புகின்றனர்.

உண்மையில் பிசிஓஎஸ் உள்ள பெண்கள் கருத்தரிப்பது கடினம்தான். ஆனால் மருத்துவரின் ஆலோசனைப்படி, கருப்பையின் செயல்பாட்டை அதிகரிக்க மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். கருவுறுதல் சிகிச்சையுடன் வாழ்க்கை முறையில் சிறிது மாற்றங்களை ஏற்படுத்தி கருத்தரிக்க முடியும்.

பிசிஓஎஸால் நீண்டகால உடல் பாதிப்புகள் உருவாகாது

பிசிஓஎஸ் என்றாலே கருமுட்டை உருவாவதில் சிக்கல் மற்றும் மாதவிடாய் சுழற்சியில் சீரற்ற தன்மை என்ற எண்ணம்தாம் இருக்கிறது. ஆனால் நீண்டகால பிசிஓஎஸ் உடலின் பல்வேறு அமைப்புகளை பாதிக்கும்.

நீரிழிவு, இன்சுலின் எதிர்ப்பு, அதிக கொலஸ்ட்ரால் மற்றும் உடல் பருமனால் நீண்டகாலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிசிஓஎஸ் வரும்போது மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏழு மடங்கு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் பிசிஓஎஸ் நிலை நீடிக்கும்போது மார்பக புற்றுநோய் மற்றும் எண்டோமெட்ரியல் புற்றுநோய்க்கான அபாயத்தை அதிகரிக்கிறது. குழந்தை பெற திட்டமிடுபவர்கள் பிசிஓஎஸை முதலில் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

பிசிஓஎஸ் இருந்தால் கருத்தடை எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை

ஒரு விந்து ஒரு கருமுட்டையுடன் இணையும்போது கருத்தரித்தல் நடைபெறுகிறது. பிசிஓஎஸ் பாதிப்பால், கருப்பையில் இருந்து கருமுட்டை வெளிவருவது பாதிக்கப்படுவதால், பல பெண்கள் உண்மையில் எந்த கருத்தடை சாதனங்களையும் எடுக்கத் தேவையில்லை என நம்புகிறார்கள்.

உண்மையில், பிசிஓஎஸ் இருக்கும் பெண்கள் கர்ப்பம் தரிப்பது அரிது என்றாலும், சில நேரங்களில் தன்னிச்சையாக கருமுட்டை வெளிவரும் என நிபுணர்கள் கூறுகின்றனர். சில நேரங்களில் இது விருப்பமில்லாத கருத்தரிப்புக்கு வழிவகுக்கும். ஆஸ்திரேலியாவில் மேற்கொண்ட ஒரு ஆய்வில் கிட்டத்தட்ட ஆரோக்கியமான பெண்களைப் போலவே பிசிஓஎஸால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. எனவே முன்னெச்சரிக்கையாக கருத்தடை பயன்படுத்துவது நல்லது.