வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வு, இயக்கங்கள் மற்றும் நடத்தையில் கூட அவர்கள் திடீர் மாற்றங்களை சந்திக்கநேரிடுகிறது. நாள்பட்ட நரம்பியல் சார்ந்த பிரச்னையான வலிப்பு நோய் வயது, பாலினம் என வித்தியாசமின்றி யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். வலிப்பு நோய் ஏற்படுவதற்கு சரியான காரணம் என்னவென்று மருத்துவர்கள் இதுவரை கண்டறியவில்லை என்றாலும், உலகளவில் 50 மில்லியனுக்கும் அதிகமானோர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
சரியான நேரத்தில் இந்த பிரச்னைக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் மனச்சோர்வு, தற்கொலை எண்ணங்கள் போன்ற பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். வலிப்பு நோயிலிருந்து குணமாக இந்த யோகாசன பயிற்சிகள் உதவும் என்கின்றனர் நிபுணர்கள்.
உத்தனாசனம்
இடுப்பு, முதுகுத்தண்டு மற்றும் குதிகால் பகுதிகளை நீட்டும் நிலை இது. இந்த பயிற்சி நரம்புகளையும் மனதையும் அமைதிப்படுத்துவதுடன் மன அழுத்தம் மற்றும் பதட்டத்திலிருந்து வெளிவர உதவுகிறது.
இந்த ஆசனத்தை எளிதில் செய்துவிடலாம். முழங்கால்களை மடக்காமல் நேராக நின்றுகொண்டு, உடலை மட்டும் முன்னோக்கி வளைத்து கைகளால் பாதங்களை தொடவேண்டும். இதே நிலையில் 7-8 நிமிடங்கள் இருந்தபிறகு மெதுவாக பழையநிலைக்கு வரவும்.
சர்வாங்காசனம்
இது அனைத்து ஆசனங்களுக்கும் அடிப்படையான ஆசனம் என்று சொல்லலாம். இந்த ஆசனம் நரம்புகளை அமைதிப்படுத்துவதோடு தைராய்டு சுரப்பியிலிருந்து ஹார்மோன்கள் நிலையாக சுரக்க உதவுகிறது. மேலும் இந்த பயிற்சி கைகள், புயங்கள், கால்கள் மற்றும் தண்டுவடத்தை வலுப்படுத்துகிறது.
தரையில் கை, கால்களை நீட்டியவாறு நேராகப் படுக்கவும். முழங்கைகளை தரையில் ஊன்றி அதன் உதவியுடன் உடலை தூக்கி கால்களை மேல்நோக்கி நேராக நீட்டவும். முதுகுத்தண்டு நேராக இருப்பதை உறுதிசெய்யவும். நன்றாக மூச்சுவிட்டு இதே நிலையில் 30-40 நொடிகள் இருந்து பின்னர் பழைய நிலையை அடையவும்.
மத்ஸ்யாசனம்
இந்த ஆசனம் நுரையீரல் நன்றாக சுவாசிக்கவும், நீட்சியடையவும் உதவுகிறது. விலா எலும்புக்கூடு, மார்பு மற்றும் தொண்டைப்பகுதிகளில் அடைப்புகளை எடுப்பதுடன், தோள்ப்பட்டை பகுதிகளையும் ரிலாக்ஸ் ஆக்குகிறது. மேலும் இது முதுகு மற்றும் புயங்களை வலுப்படுத்துகிறது.
தரையில் நேராகப்படுத்து கைகளை உடலின்கீழ் மடித்துவைக்கவும். தலை பின்னோக்கி வளைந்திருக்க மார்பு மற்றும் தலைப்பகுதியை அப்படியே உயர்த்தவும். முழங்கைகளின் உதவியுடன் முழு உடலையும் சமநிலைப்படுத்தவும். மார்புப்பகுதி விரிவடையும்படி மூச்சை நன்றாக இழுத்துவிடவும்.
ஆலாசனம்
இந்த யோகா நிலை அழுத்தத்தை குறைத்து உடலை ரிலாக்ஸ் ஆக்குகிறது. இது ரத்த அழுத்தத்தை சமநிலையில் வைப்பதுடன், மனம் மற்றும் உடல்நலத்தை மேம்படுத்துகிறது.
நேராக படுத்து முதுகு மற்றும் கால்களை மேல்நோக்கி உயர்த்தி வயிற்றுப்பகுதி வளையும்வரை கால்களை தலைக்கு மேலாக உயர்த்தி வளைக்கவும். கால்கள் தலைப்பகுதியில் தரையை தொடும்வரை உடலை நன்றாக வளைக்கவும். இதே நிலையில் 15-20 நொடிகள் இருக்கவும்.
சவாசனம்
இன்சோம்னியா என்று சொல்லக்கூடிய தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுபவர்கள் இந்த ஆசனத்தை கட்டாயம் செய்யவேண்டும். இது மனதை ஒருநிலைப்படுத்துவதுடன், மன அழுத்தம் மற்றும் பதட்டத்திலிருந்து வெளிவர உதவுகிறது.
நேராக படுத்து மனதை ரிலாக்ஸ் செய்யவும். மனதில் நேர்மறை எண்ணங்களை கொண்டுவந்து இதேநிலையில் 5 நிமிடங்கள் இருக்கவும்.