ஹெல்த்

வாகன ஓட்டிகளே உஷார்: மேடு பள்ளங்களில் வண்டி ஓட்டினால் இந்த பாதிப்புகளெல்லாம் வருமாம்!

வாகன ஓட்டிகளே உஷார்: மேடு பள்ளங்களில் வண்டி ஓட்டினால் இந்த பாதிப்புகளெல்லாம் வருமாம்!

JananiGovindhan

உத்தரப் பிரதேசத்தின் பலியா பகுதியில் மழைநீர் தேங்கி சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பது தொடர்பாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்ட போதும் அரசு அதிகாரிகள் தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்காமலேயே இருந்திருக்கிறார்கள்.

இப்படி இருக்கையில், செப்டம்பர் 14ம் தேதி பலியா பகுதியைச் சேர்ந்த ப்ரவிர் குமார் என்பவர் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அப்பகுதியில் அவல நிலை குறித்து பேட்டி அளித்துக் கொண்டிருக்கும்போதே பின்னால் மக்களை ஏற்றிச் சென்ற எலெக்ட்ரிக் ரிக்‌ஷா ஒன்று பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விழுந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பெருமளவில் வைரலாகியிருக்கிறது.

இந்த நிலையில், இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்கள், குறிப்பாக மழைக்காலங்களில், பரிதாபகரமான சாலை நிலைமைகள் காரணமாக, வாகன ஓட்டிகளிடையே நாள்பட்ட முதுகெலும்பு பாதிப்புகள் அதிகரித்து வருவதாக கூறுகின்றனர். ஸ்கூட்டர், பைக் போன்ற டூ வீலர்களில் செல்வோர் பள்ளங்கள் நிறைந்த சாலைகளில் ஓட்டும் போது இப்படியான பாதிப்புகளை பெறுவதாக எலும்பு மற்றும் முதுகெலும்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடுமையான உயர் இரத்த அழுத்தம், சுருக்க முறிவு, ஸ்லிப் டிஸ்க், நாள்பட்ட முதுகுவலி, முழங்கால் காயம் அல்லது வலி மற்றும் கழுத்தில் காயம் போன்றவை ஏற்படலாம் என எச்சரிக்கிறார்கள். "தலை மற்றும் உடற்பகுதியை நிமிர்ந்து வைத்திருக்கும் முதுகெலும்புதான் உடலுக்கு நெகிழ்வுத் தன்மையையும் இயக்கத்தையும் அனுமதிக்கிறது. அலுவலகத்திற்குச் செல்பவர்களிடையே, குறிப்பாக தினசரி நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் மற்றும் சிறிய உடற்பயிற்சி செய்பவர்கள் மத்தியில் முதுகுப் பிரச்சனை தொற்றுநோயாகவே உள்ளது.

முதுகு தொடர்பான பாதிப்புகளுக்கு மோசமான சாலைகளும் முக்கியப் பங்காற்றுகின்றன. ” என்று அப்போலோ மருத்துவமனையின் மூத்த ஆலோசகர், எலும்பியல் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ராஜீவ் சர்மா டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறினார்.

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டும் அல்ல, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு பிரச்னைகளை ஏற்கனவே எதிர்கொள்ளும் முதுமையில் உள்ளவர்கள் Wedge Comprehensive Fractures என்ற நிலைமைகளால் பாதிக்கப்படலாம் என்றும் எலும்பியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

"கிளட்ச் மற்றும் ஆக்ஸிலரேட்டரை தொடர்ந்து அழுத்துவது கார் ஓட்டுபவர்களுக்கு முழங்கால் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்" என்று ஹைதராபாத்தில் உள்ள கேர் மருத்துவமனையின் ஆலோசகர் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் பிரவீன் மெரெட்டி தி டெக்கான் க்ரோனிக்கிளிடம் தெரிவித்திருக்கிறார்.

பள்ளங்கள் நிறைந்த சாலையில் வாகனம் ஓட்டுவதும் cervical spondylosis நோயால் பாதிக்கப்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பேருந்துகள், வேன்கள் அல்லது ஆட்டோ ரிக்ஷாகளில் பள்ளிக்குச் செல்லும் சிறு குழந்தைகள் கூட தசைகள், எலும்புகள் மற்றும் மூட்டுகளை பாதிக்கும் நிலைமைகளான musculoskeletal disorders பற்றி புகார் செய்யத் தொடங்கியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.