‘நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தமும் சேர்ந்தே வரும்'
'கிட்னி, இருதய பிரச்னையும் வரும் என்பதால் உப்பை அளவாக சேர்க்க வேண்டும்'
'உயர் ரத்த அழுத்தம் வரும் என மருத்துவர்கள் நேராகவே கூறத் தொடங்கிவிட்டனர்'
'உயர் ரத்த அழுத்தம் அதிகரித்தால் பக்கவாதம், இருதய பிரச்னை, ரத்த கசிவு ஏற்பட வாய்ப்பு'
‘உப்பு காரமா சாப்பிட்டா நல்லா இருக்கும்..’
- இப்படி பலரும் கூறுவதை கேட்டிருப்போம்.
நம் உணவு பழக்கவழக்கங்களில் உப்புக்கென்று தனி இடம் உண்டு. ஊறுகாய் தொடங்கி அத்தனை வகை சமையலிலும் சிறிய அளவில் சேர்க்கும் உப்பிற்கு சுவையை கூட்ட பெரிய பங்கிருக்கிறது. ஆனால், உப்பு அதிகமாக சேர்ப்பதால் பல்வேறு நோய்கள் வரும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் பத்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
உப்பை அதிகமாக சாப்பிடுவதால் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவில் உள்ள டியூலேன் பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
நீரிழிவு நோய் மட்டுமல்ல மேலும் பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் பட்டியலிடுகின்றனர். உப்பை சுவைக்காக மட்டும் குறைந்த அளவாக, அதாவது 5 முதல் 10 கிராம் மட்டுமே ஒருவர் பயன்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.
சமையலின் போது உப்பை சேர்க்காமல் TABLE SALT என்ற பெயருக்கு ஏற்றவாறு சாப்பிடும் போது சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம் எனவும் யோசனை கூறுகின்றனர்.