ஹெல்த்

இந்த இடங்களில் டாட்டூ குத்துவது அதிக ரிஸ்க்! ஏன்? - எச்சரிக்கும் நிபுணர்கள்

இந்த இடங்களில் டாட்டூ குத்துவது அதிக ரிஸ்க்! ஏன்? - எச்சரிக்கும் நிபுணர்கள்

Sinekadhara

டாட்டூ குத்திக்கொள்ளுதல் இப்போது ட்ரெண்டிங்காக பார்க்கப்படுகிறது. அதேசமயம் உடலில் பிடித்த டிசைனை, பிடித்த கலரில் மையிட்டுக்கொள்வதில் வலியுடன் கூடுதல் கவனமும் தேவை. ஆனால் டாட்டூ குத்துவதற்கு முன்பு உடலில் எங்கு குத்தப்போகிறோம் என்பதையும் கவனிக்கவேண்டியது மிகமிக அவசியம். உடலில் டாட்டூ குத்துதல், துளையிடுதல் மற்றும் பிற காஸ்மெடிக் சிகிச்சைகளை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன என எடுத்துரைக்கின்றனர் நிபுணர்கள். காஸ்மெடிக் சிகிச்சைகளில் உள்ள ஆபத்துகளைவிட டாட்டூ குத்துதலில் அதிக ஆபத்து உள்ளது என விளக்குகின்றனர். குறிப்பாக உடலின் சில பகுதிகளில் டாட்டூ குத்துவது நல்ல முடிவல்ல என்கின்றனர்.

உடலில் எங்கெல்லாம் டாட்டூ குத்துவது ரிஸ்க்?

குறிப்பாக உடலில் இரண்டு பாகங்களில் டாட்டூ குத்தவே கூடாது; அப்படி குத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என கண்டிப்பாக எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

1. பிறப்புறுப்புகள்
2. உள் உதடுகள்

இவைதவிர உடலின் சில பகுதிகளில் டாட்டூ குத்தினால் குணமாக நீண்டநாட்கள் ஆகும்.

1. உள்ளங்கைகள்
2. உள்ளங்கால்கள்
3. நாக்கு
4. பல் ஈறுகள்

இந்த பகுதிகளில் டாட்டூ குத்தினால் ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதுடன், தழும்புகளும் உருவாகும்.

உடலில் டாட்டூ தவறாகிப்போனதை தெரிந்துகொள்வது எப்படி?

1. குறிப்பிட்ட பகுதியில் ஆர்டிஸ்ட் அதிக மை இடுதல்

2. டாட்டூவைச் சுற்றி சிவந்துபோதல்

3. டாட்டூ குத்திய இடத்தில் அதீத வலி

4. டாட்டூ குத்திய இடத்தில் சீழ் வடிதல்

5. டாட்டூ குத்திய இடம் அதிக சூடாக இருத்தல் மற்றும் துடிப்பது போன்ற வலி

இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி, பாதிக்கப்பட்ட இடத்தில் ஆண்டிபயாடிக் தடவவேண்டும். மருந்துகள் சீழை கடினமாக்கி மஞ்சள்நிற செதில்கள் போன்று மாற்றி பின்னர் அது காய்ந்து உதிர்ந்துவிடும். ஆனால் அந்த இடத்தில் வெள்ளைநிற தழும்பு உருவாகலாம்.

குறிப்பாக, டாட்டூ குத்தும்போது அந்த ஊசி ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதா என்பதை உறுதிசெய்வது அவசியம். இதன்மூலம் ஹெச்.ஐ.வி போன்ற மோசமான தொற்றுகளும் எளிதில் பரவும் வாய்ப்புகள் அதிகம். எனவே பயன்படுத்தப்படாத புதிய ஊசிகளை பயன்படுத்தவும்.