இதய மாற்று அறுவை சிகிச்சை முகநூல்
ஹெல்த்

ஈரோடு-கோவை.. 50 நிமிடத்தில் வந்த ஆம்புலன்ஸ்; இஸ்லாமிய இளைஞருக்கு பொருத்தப்பட்ட இந்து பெண்ணின் இதயம்!

விடியல் செயலியால் ஈரோட்டிலிருந்து கோவைக்கு 50 நிமிடத்தில் வந்தடைந்த இந்து பெண்ணின் இருதயம்- இஸ்லாமிய இளைஞருக்கு பொருத்தி உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.

ஜெனிட்டா ரோஸ்லின்

விடியல் செயலியால் ஈரோட்டிலிருந்து கோவைக்கு 50 நிமிடத்தில் வந்தடைந்த இந்து பெண்ணின் இருதயம், இஸ்லாமிய இளைஞருக்கு பொருத்தி உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.

கேரளாவை பூர்விகமாக கொண்டவர் ஆட்டோ ஓட்டுநரான ரகுமான் (38). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உடல் நல குறைவு ஏற்பட்டு கோவை பந்தைய சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ரகுமான்

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ரகுமானின் இதயத்தில் உள்ள வால்வுகளின் இயக்கம் குறைவாகவும், ரத்த குழாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு இருதயம் செயலிழந்து இறுதி கட்டத்தில் இருப்பதை உறுதி செய்தனர். உயிருக்கு போராடிய ரகுமானுக்கு இருதய மாற்று சிகிச்சை செய்தால் மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியை சேர்ந்த மஞ்சுளா (51) என்ற பெண், விபத்தில் சிக்கி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 4ம் தேதி மூளை சாவு அடைந்தார்.

இதனையடுத்து அவரது உறவினர்கள் மஞ்சுளாவின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன் வந்தனர். விடியல் செயலி மூலம் மஞ்சுளாவின் இதயம் தானமாக அளிக்கப்பட இருப்பதை அறிந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சைக்கான உபகரணங்களை எடுத்து கொண்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்தனர்.

மஞ்சுளா

அங்கு அரசு மருத்துவர்களின் உதவியோடு மஞ்சுளாவின் இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து கொண்டு மருத்துவ துறை, காவல்துறை, ஆம்புலன்ஸ் பணியாளர்கள் உதவியுடன், 50 நிமிடத்தில் மின்னல் வேக பயணத்தில், பெருந்துறையில் இருந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தடைந்தது. பின்னர் ரகுமானுக்கு மஞ்சுளாவிடமிருந்து பெறப்பட்ட இருதயம் பொருத்தப்பட்டது.

மயக்கவியல் துறை மருத்துவர்கள் உட்பட 60 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சையை செய்து முடித்தனர்.

இந்த இருதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நிகழ்த்திய பின்னர், இது குறித்து தனியார் மருத்துவமனையின் மருத்துவர் பக்தவச்சலம் பேசுகையில், “எங்களுடைய இதய மருத்துவமனை 30 வருடங்களாக இயங்கி வருகிறது. இதில் சுமாராக 3 லட்சம் நபருக்கு சிகிச்சையானது அளிக்கப்பட்டுள்ளது. 30,000 பேருக்கு பைபாஸ் சிசிக்சை என்று இப்படி ஏராளமான சிகிச்சையானது அளிக்கப்பட்டிருக்கிறது.

மருத்துவர் பக்தவச்சலம்

ஆனால் இம்மருத்துவனமையின் 50 வது ஆண்டுவிழாவில் இதய மாற்று அறுவை சிகிச்சை என்பது முதல் முறை நடந்திருக்கிறது. வேறு இடங்களிலும் இச்சிகிச்சையை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதை வெற்றிகரமாக முடிப்பது என்பது மிகப்பெரிய விஷயம். யாரோ ஒருவரின் இறப்பு யாரோ ஒரு முகம் தெரியாத நபரின் உயிர் பிழைப்பு காரணமாகிறது எனில் அது மிகப்பெரிய தர்மம். உடல் உறுப்பினை பெற்று கொண்டவர் ஒரு இஸ்லாமிய சகோதரர் அதை வழங்கியவர் ஒரு இந்து மதத்தினை சேர்ந்தவர்.

இந்து மனிதர் ஒருவரின் இருதயம் இப்போது ஒரு இஸ்லாமிய சகோதரரின் உள்ளே துடித்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை எந்த வித பாகுபாடும் இல்லாமல் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாகதான் வாழ்கிறார்கள். எனக்கு இது மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயம்” என்று தெரிவித்தார்.