ஹெல்த்

சீரற்ற மாதவிடாய் பிரச்னை... காரணங்களும் தீர்வுகளும்!

சீரற்ற மாதவிடாய் பிரச்னை... காரணங்களும் தீர்வுகளும்!

Sinekadhara

சீராக வந்தாலும் வராவிட்டாலும் பெண்களுக்கு அசௌகர்யத்தை கொடுக்கக்கூடியது மாதவிடாய். உலகளவில் சீரற்ற மாதவிடாயால் அவதிப்படும் பெண்களுக்கு பல்வேறு உடல்நலப்பிரச்னைகள் ஏற்படுவதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ’மாதவிடாய் சுழற்சி’ என்பது மாதவிடாய் ஆரம்பித்த முதல் நாளிலிருந்து அடுத்த மாதம் மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல்நாள் வரை கணக்கிடப்படுகிறது. பொதுவாக இந்த சுழற்சி 28 நாட்களுக்கு ஒருமுறை என கணக்கிடப்பட்டாலும், நாட்கள் சற்று முன்னும் பின்னுமாக இருப்பதையும் சீரான மாதவிடாயாகவே மருத்துவர்கள் எடுத்துக்கொள்கின்றனர். ஆனால் பல பெண்களுக்கு மாதவிடாய் தவறுவதுடன், சில மாதங்களுக்கு வராமலே போவதால் அவர்கள் உடல் மற்றும் மனதளவில் அவதிக்குள்ளாகிறார்கள்.

சீரற்ற மாதவிடாய்க்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், சில முக்கிய காரணங்கள் பெரும்பாலானவர்களிடையே காணப்படுகிறது.

ஹார்மோன்கள் சமச்சீரின்மை: பல நேரங்களில், புரோஜெஸ்டின் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களின் சுரப்பு அதிகமாவதால் ரத்தப்போக்கு அதிகமாக ஏற்படுகிறது. வெப்பநிலை மாற்றம், கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்தல் அல்லது பிற மருந்து மாத்திரைகள், பிசிஓடி மற்றும் எண்டோபெட்ரோசிஸ் போன்ற பிரச்னைகள் ஹார்மோன்கள் சமச்சீரின்மைக்கு வழிவகுக்கிறது.

வாழ்க்கைமுறை: அன்றாட வாழ்க்கைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துவது பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். சீரற்ற மாதவிடாய் பிரச்னை ஏற்பட முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று.

உணவுமுறை மாற்றம்: உடல் இயக்கத்தில் நம்முடைய உணவுமுறை முக்கியப் பங்காற்றுகிறது. கலோரி குறைவான டயட் முறை அல்லது மாவுச்சத்து அல்லது புரதங்களை தவிர்த்தால், கண்டிப்பாக அது மாதவிடாய் சுழற்சியில் தாக்கத்தை ஏற்படுத்தி சீரற்ற மாதவிடாய் பிரச்னைக்கு வழிவகுக்கும்.

இதை சரிசெய்வது எப்படி?

சீரற்ற மாதவிடாய் பிரச்னைக்கான காரணம் என்னவென்று கண்டறிந்த பிற்பாடு, அதனை சீராக்க சில எளிய முறைகளை வீட்டிலிருந்தே செய்யலாம்.

யோகா: உடல் வலியை போக்கவும், அழற்சியை குணமாக்கவும், உடல் இயக்கத்தை மேம்படுத்தவும் யோகா ஒரு சிறந்த பயிற்சி. தொடர்ந்து 30 -45 நாட்கள் யோகாசனங்களை செய்துவர மாதவிடாய் சீராகும்.

ஆரோக்கியமான உணவுகள்: ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை தினசரி டயட்டில் எடுத்துக்கொள்வது மாதவிடாயை சீராக்கும். உடற்பருமன் மற்றும் குறைந்த எடை இரண்டுமே சீரான மாதவிடாய் சுழற்சிக்கு நல்லதல்ல.

இஞ்சி: அதீத ரத்தப்போக்கு ஏற்படுபவர்களுக்கு இஞ்சி நல்ல தீர்வை கொடுக்கும். இஞ்சியில் ஆண்டி ஆக்சிடண்டுகள் நிறைந்திருப்பதால் உடல் ஆரோக்கியத்தை அது மேம்படுத்தும்.

லவங்கப்பட்டை: இந்த மசாலா பொருளானது பிசிஓடி பிரச்னையால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவுவதுடன், மாதவிடாய் வலி மற்றும் அதீத ரத்தப்போக்கை கட்டுப்படுத்துகிறது.